சுனிதாவுடன் பூமிக்குக் கிளம்பியது அட்லாண்டிஸ்:நாளை இரவு தரையிறங்கும்
கேப் கேனவரல் (புளோரிடா):தனது விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்குக் கிளம்பியுள்ளது. இதில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பயணிக்கின்றனர். இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அட்லாண்டிஸ் பூமியை வந்தடையும்.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவதற்காக ஜூன் 8ம் தேதி அட்லாண்டிஸ் விண்கலம் தனது விண் பயணத்தை தொடங்கியது.விண்ணில் பாய்ந்தபோது அட்லாண்டிஸ் விண்கலத்தில் கோளாறுகள் உருவாகின. அதன் வெப்பம் தாங்கும் தகடுகள் சேதமடைந்தன.
இதையடுத்து நான்கு முறை ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளப்பட்டு அட்லாண்டிஸ் விண்கலத்தின் வெப்பத் தகடு சரி கோளாறு சரி செய்யப்பட்டது. இருப்பினும் கூட தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
அட்லாண்டிஸ் விண்கலம் விண்ணுக்குச் சென்ற பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கம்ப்யூட்டர்கள் செயலிழந்ததன. இப்போது அவை சரி செய்யப்பட்டு விட்டன.
இரு நாட்கள் தூங்காமல் கண் விழித்து விண்வெளி நிலைய கமாண்டர் பைடார் யுர்ச் சிக்கின், பிளைட் என்ஜீனியர் ஓலெக் கோடோவ் ஆகியோர் கம்ப்யூட்டர்களின் பழுதை நீக்கி விண்வெளி நிலையம் மற்றும் நாசாவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்தனர்.
இந் நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8.12 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து பூமிக்குக் கிளம்பியது. நாளை இரவு 11.24 மணிக்கு புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் அட்லாண்டிஸ் தரையிறங்கவுள்ளது.
அட்லாண்டிஸ் மூலம் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் பல புதிய சாதனைகளைப் படைத்த பெருமையுடன் வந்து கொண்டுள்ளார்.
அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த முதல் பெண் சுனிதாதான். அதேபோல விண்வெளியில் அதிக அளவு விண் நடை புரிந்ததும் சுனிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் இருந்தபோது அமெரிக்காவில் நடந்த மராத்தான் போட்டியில் விண்ணிலிருந்தபடியே சுனிதாவும் பங்கேற்றார் என்பது புதிய சாதனையாகும்.












Click it and Unblock the Notifications