தேர்தல் ஆணையத்தை மிரட்டவில்லை - கருணாநிதி
மதுரை:மத்திய அரசின் மூலம் தேர்தல் ஆணையத்தை மிரட்டி, நிர்ப்பந்தப்படுத்தியதாக ஜெயலலிதா கூறுவது வெறும் கற்பனையே என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக மதுரை வந்துள்ள முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது என்று மத்திய அரசின் மூலம் நான் தேர்தல் ஆணையத்தை மிரட்டி, நிர்ப்பந்தப்படுத்தியதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. அந்த அமைப்பு நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கையில்தான் ஜனநாயகத்தை மதிக்கின்ற அரசியல்வாதிகள் அனைவரும் செயல்படுகிறார்கள்.
எனவே மத்திய அரசை வைத்து தேர்தல் ஆணையத்தை மிரட்டியதாக சொல்வது வெறும் கற்பனையே ஆகும்.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை அதிகாரிகள், காவலர்களை தேர்தல் ஆணையம் மாற்றியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், திமுக அரசு ஒத்துழைத்தது.
காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின் மீது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழக அரசும் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு போதிய நீர் வந்த பின்னர் அணை திறக்கப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications