மதுரையில் திட்டமிட்டபடி இடைத் தேர்தல்-கருணாநிதி இன்று பிரசாரம்
மதுரை:
மதுரை மேற்குத் தொகுதியில் திட்டமிட்டபடி இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கும்படி நரேஷ்குப்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மேற்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான விவகாரத்தை தேர்தல் ஆணையம் சீரியஸாக எடுத்துக் கொண்டது. மேலும் அங்கு நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களும் தேர்தல் ஆணையத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரிபாதியைத் தொடர்பு கொண்டு, இந்த நிலை நீடித்தால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டி வரும் என்று எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. டிஜிபியே நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்தார்.
இந்த நிலையில் மதுரையில் நிலைமை அசாதாரணமாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் தேர்தலை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று பரிசீலித்தது.
தேர்தலை ஒத்திவைத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று முன்னதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை நேற்று மாலையில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மறுத்தார்.
இதனால் தேர்தல் ஆணையம் என்ன முடிவை அறிவிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தச் சூழ்நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதில்லை என்றும், திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவது எனவும் ஆணையம் தீர்மானித்தது.
மேலும் மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் முடியும் வரை அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து தினசரி அறிக்கை அனுப்புமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமம், தேர்தலை ஒத்திவைக்கும் முடிவை முழுவதுமாக தேர்தல் ஆணையம் கைவிட்டு விடவில்லை என்றும் ஆணையத் தரப்பில் கூறப்பட்டது. மதுரை மேற்குத் தொகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை இன்னும் திருப்தி தரும் வகையில் மேம்படவில்லை என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி இன்று மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். இதற்காக நேற்று இரவு ரயில் மூலம் அவர் மதுரைக்குக் கிளம்பி இன்று காலை சென்றடைந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை செல்லூர் பகுதியில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று கருணாநிதி உரை நிகழ்த்துகிறார்.
ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மதுரையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவருடன் முதல்வரின் மகன் மு.க.அழகிரியின் மனைவி காந்தி, அமைச்சர் தமிழரசி ஆகியோரும் பிரசாரத்தில் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications