காங். தலைவரைக் கொன்றதாகபிரதீபா பாட்டீல் தம்பி மீது புகார்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள பிரதீபா பாட்டீலின் சகோதரர் தனது கணவரைக் கொன்று விட்டதாகவும், தனது தம்பியை சட்டத்தின் பிடியிலிருந்து பிரதீபா பாட்டீல் காப்பாற்றி வருவதாகவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிரோண்மனி அகாலிதளம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுக்தேவ் சிங் தின்ட்சாவின் வீட்டில் இன்று செய்தியாளர் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.
அப்போது மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவன் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி பாட்டீல் என்பவர் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். ரஜினி பாட்டீல், ஜல்கோவன் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மராத்தி பேராசிரியையாக உள்ளாராம்.
பின்னர் ரஜினி பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கணவர் வி.ஜி.பாட்டீல். இவர் ஜல்கோவன் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அவர் கொலை செய்யப்பட்டார்.
அவரைக் கொலை செய்தவர் பிரதீபா பாட்டீலின் தம்பியான ஜி.என். பாட்டீல்தான். கட்சித் தலைவர் தேர்தலில் ஜி.என். பாட்டீல், எனது கணவரிடம் தோற்றுப் போய் விட்டார். இதையடுத்து ஜி.என். பாட்டீல் தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து கொண்டு எனது கணவரைக் கொன்று விட்டார்.
ஆனால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் அவரை பிரதீபா பாட்டீல் காப்பாற்றி வருகிறார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஏற்கனவே நான் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை பிரதீபா பாட்டீல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜி.என். பாட்டீலும் சுதந்திரமாக நடமாடி வருகிறார் என்றார் ரஜினி பாட்டீல்.
இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறும் புகார்கள் குறித்து நாங்கள் கவலைப்படவே இல்லை.
குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதை அரசியலாக்கக் கூடாது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மூன்றாவது அணியும் அதை செய்து வருகின்றன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
பிரதீபா பாட்டீலுக்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அனைத்துமே ஆதாரமற்ற, உண்மையற்ற புகார்கள் என்றார் ஜெயந்தி நடராஜன்.
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இது மிகவும் மலிவான அரசியல் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications