இறங்கியது அட்லாண்டிஸ்-திரும்பினார் சுனிதா
ஹூஸ்டன்:உலகம் முழுதும் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அட்லாண்டிஸ் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களுடன் நேற்று நள்ளிரவு பத்திரமாக பூமிக்குத் திரும்பியது.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்களை சுமந்து கொண்டு பூமிக்குத் திரும்பிய அட்லாண்டிஸ் விண்கலம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் கடந்த 24 மணி நேரமாக வானில் நிலை கொண்டிருந்தது.அட்லாண்டிஸ் விண்கலத்தில் உள்ள எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே வரும் என்பதால், அட்லாண்டிஸ் பத்திரமாக திரும்புவது குறித்து உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் கென்னடி விண்வெளி மையத்தில் அட்லாண்டிஸைத் தரையிறக்குவதற்காக 3 முறை முயற்சிக்கப்பட்டது. ஆனால் மூன்று முறையும் அது கை கூடவில்லை. அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக கென்னடி மையத்தில் அட்லாண்டிஸைத் தரையிறக்காமல், கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு (அமெரிக்க நேரப்படி மாலை 3.50) அட்லாண்டிஸ் விண்கலம் மிக பத்திரமாக எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
அட்லாண்டிஸ் பத்திரமாக தரையிறங்கியது குறித்து நாசா விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். விண்கலம் தரையிறங்கியதும் சுனிதா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு அவர்கள் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் வைக்கப்படுவர். அதன் பின்னரே அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.
பூமிக்குத் திரும்பியுள்ள சுனிதா பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக வெற்றிகரமாக திரும்பியுள்ளார். விண்வெளியில் அவர் 195 நாட்களைக் கழித்துள்ளார். அதிக அளவுக்கு விண் நடை நடந்த ஒரே பெண் சுனிதாதான். அதிக நாட்கள் விண்வெளியில் கழித்த பெண்ணும் அவர்தான்.
சுனிதா பத்திரமாக திரும்புவதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் பிரார்த்தனைகள், சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications