3 பேர் கொலை: டெலோ போராளிக்கு தூக்கு
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பும்போது துப்பாக்கியால் சுட்டு 3 பேரைக் கொன்ற சம்பவத்தில் கைதான டெலோ போராளிக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவண்ணாமலை விரைவு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை அருகே உள்ளது தனிப்பாடி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கார கவுண்டர். கடந்த 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி இரவு நான்கு மர்ம மனிதர்கள் வந்தனர்.
துப்பாக்கி முனையில் பிச்சைக்கார கவுண்டர் வீட்டில், ரூ. 21 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். தப்பிய கொள்ளையர்கள், தண்டாரம்பட்டு கூட்டு ரோட்டில் வந்தபோது போலீஸார் குறுக்கிட்டனர்.
இதையடுத்து போலீஸாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் சாலையோரம் நின்றிருந்த பாஞ்சாலை, ராவணன், ராமசாமி ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி 12 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இவர்களில் டெலோ போராளி ராஜன் (இவர்தான் கும்பலின் தலைவர்), ஜூடு, மோகன், சேகர், பொன்னுச்சாமி, டேணியல் என்கிற முருகன், சண்முகசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு திருவண்ணாமலை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது, தலைமறைவாக இருந்த பொன்னுச்சாமி இறந்து போனார். பெரியசாமி தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சண்முகசுந்தரம் விடுதலை செய்யப்பட்டார். டெலோ போராளியான ராஜனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சேகர், மோகன் ஆகியோருக்கு தலா 7 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை முயற்சி வழக்கில் தலா ரூ. 1 லட்சமும், கொலை வழக்கில் தலா ரூ. 1.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அதிரடியான தீர்ப்பினால் திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications