தண்டவாளத்தில் விரிசல்-இரு ரயில்கள் தப்பின
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் மற்றும் உடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெரும் விபத்திலிருந்து தப்பின.
காட்பாடிக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் உடைப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டிருந்தது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
கேங்மேன் ஒருவர் இதைப் பார்த்து ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயில்வே போலீஸாருக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகளும் போலீஸாரும் விரைந்து வந்தனர்.
உடைப்பு மற்றும் விரிசலை சரி செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது. அந்த சமயத்தில், திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும், கன்னியாகுமரியிலிருந்து ஜம்முதாவி செல்லும் ரயிலும் வந்து கொண்டிருந்தன. அவை இரண்டும் ஜோலார்பேட்டையிலேயே நிறுத்தப்பட்டன.
உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை மற்றும் குமரி ரயில்கள் பெரும் விபத்திலிருந்து தப்பின.
சென்னை ரயிலை கவிழ்ப்பதற்காக இந்த சதி நடந்ததா, நக்சலைட்டுகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications