கஸ்டமர்கள் டைரியை தீயில் எரித்துவிபச்சார பெண் புரோக்கர்கள் சபதம்
சென்னை:வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டைரியை தீயில் போட்டு எரித்து, இனிமேல் விபச்சாரத் தொழிலில் ஈடுபட மாட்டோம் என விபச்சார பெண் புரோக்கர்கள் சென்னையில் சபதம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை அண்ணா நகரில் பெண் குழந்தைளுக்கு தீங்கு இழைத்தல் மற்றும் கடத்தலுக்கு எதிரான நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 12 பெண் விபச்சார புரோக்கர்களும் கலந்து கொண்டனர்.
தாங்கள் இன்று முதல் புரோக்கர் வேலையை விட்டு விடுவதாகவும், இனிமேல், விபச்சாரத் தொழிலில் யாரையும் ஈடுபடுத்த மாட்டோம், யாருக்கும் பெண்களை புக் செய்து தர மாட்டோம் என்றும் அந்த நிகழ்ச்சியின்போது அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.
சொன்னதோடு நில்லாமல், தங்களிடம் இருந்த வாடிக்கையாளர்கள் விவரம் அடங்கிய டைரிகளை தீயில் போட்டுக் கொளுத்தி அந்த நெருப்பின் மீது கைகளை நீட்டி உறுதிமொழியும் ஏற்றனர்.
மேலும், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏறி அமர்ந்து அண்ணா நகர் பகுதியில் வலம் வந்து பெண் கடத்தலுக்கு எதிராக கோஷமிட்டு பிரசாரமும் செய்தனர்.
நிகழ்ச்சியில் சில புரோக்கர் பெண்கள் பேசுகையில் வயிற்றுப் பிழைப்புக்காகவே இந்தத் தொழிலுக்கு வந்தோம். விரும்பி வரவில்லை. எங்களது குடும்ப சூழல் காரணமாக ஆரம்பத்தில் விபச்சாரம் செய்தோம். வயது ஆன பின்னர் புரோக்கர்களாக மாறினோம்.
இப்போது எங்களது நிலை தெரிந்து எங்களது குடும்பத்தினர் எங்களை விட்டுப் பிரிந்து விட்டனர். இனிமேலும் இந்தத் தொழிலில் ஈடுபட விரும்பவில்லை. இனிமேல் கெளரவமாக பிழைப்போம் என்றனர்.
கலா என்ற பெண் கூறுகையில், எனது சொந்த மகளையே நான் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினேன். ஆனால் அவளுக்கு எய்ட்ஸ் வந்து இறந்த பின்னர்தான் நான் செய்து வந்த பாவத் தொழில் எனக்கு உறுத்தியது என்று கூறி கண் கலங்கினார்.












Click it and Unblock the Notifications