மதுரை இடைத் தேர்தலில் 75% வாக்குப் பதிவு
மதுரை:
மதுரை மேற்குத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரை மேற்குத் தொகுதிக்கு நேற்று இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முற்றிலும் மத்திய துணை ராணுவப் படையின் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது.
தமிழக போலீஸார் வாக்குச் சாவடி வளாகத்திற்குள் கூட அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு சட்டம் ஒழுங்கைப் பார்த்துக் கொள்ளும் பணி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் போலீஸார் வரக் கூடாது என தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது. இப்படி துணை ராணுவப் படையினரை வைத்து தேர்தல் நடத்துவது என்பது பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வட மாநிலங்களில் மட்டுமே நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பொதுவாக அமைதியாக இருந்தது. ஓரிரு வன்முறைச் சம்பவங்கள் மட்டுமே நடந்தன. சில வாக்குச் சாவடிகளில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக புகார்கள் வந்தன.
ஆனால் தொகுதியிலேயே முகாமிட்டிருந்த தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, அதுபோன்ற புகார்கள் கிடைக்கப் பெற்றவுடன் மின்னலென பறந்து சென்று நிலைமையை சரி செய்தார். அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
தமிழக போலீஸாரின் கெடுபிடி இல்லாத காரணத்தால் வாக்காளர்கள் படு சுதந்திரமாக, நிம்மதியாக வாக்களித்தனர். இதனால் 75 சதவீதம் அளவுக்கு வாக்குப் பதிவு நடந்துள்ளது.
பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் மதுரை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறை மூடி சீல் வைக்கப்பட்டது. அங்கும் மத்திய துணை ராணுவப் படையினர்தான் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
29ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பிற்பகலுக்குள் முடிவு தெரிய வரும்.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமரன், பாஜக சார்பில் சீதாராமன் உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர்.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப்பதிவு மிகவும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது.
75.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முழுமையான கணக்கு வந்த பிறகு இதில் மாற்றம் இருக்கலாம். கடந்த முறை இங்கு 70 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
மத்திய துணை ராணுவத்தினர், போலீஸார், தேர்தல் பார்வையாளர்கள், ரோந்து பார்வையாளர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்பு காரணமாக தேர்தலை அமைதியாக நடத்த முடிந்தது.
11,12,13 வார்டுகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தேமுதிக கோரியுள்ளது. அதுகுறித்துப் பரிசீலிப்போம்.
இடைத் தேர்தலை நடத்த அதிக செலவாகியுள்ளது. இருப்பினும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்றார் குப்தா.












Click it and Unblock the Notifications