ஜெ விவகாரம்- தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நிறைவேற்றப்படும்: நரேஷ் குப்தா
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு குறித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கடிதம் கிடைத்த பின்னர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.
இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். 2 தொகுதிகளில் போட்டியிடுவதை மறைத்துவிட்டு மற்ற 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்தார் ஜெயலலிதா.
இதை எதிர்த்து திமுக எம்பி குப்புசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரிகளிடம் பொய்யான உறுதிமொழிகளை ஜெயலலிதா கொடுத்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதராங்கள் உள்ளதாக கூறியது.
6 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜெயலலிதா 3வதாக புவனகிரியிலும், 4வதாக புதுக்கோட்டையிலும் போட்டியிட்டது தவறு. அந்த தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் அந்த தொகுதி மாஜிஸ்திரேட்டிடம் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரித்து தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில்,
ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு இன்னும் எனக்கு வரவில்லை. அந்த உத்தரவு கடிதம் மூலம் வரலாம் என கருதுகிறேன்.
தேர்தல் ஆணையத்தின் கடிதம் கிடைத்ததும், அதில் கூறியுள்ளபடி செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.
மேலும் அவர் மதுரை மேற்கு தொகுதி தேர்தல் குறித்து கூறுகையில்,
மதுரை மேற்கு தொகுதி இடைதேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே நடைபெற்றது.
மத்திய துணை ராணுவம் மற்றும் போலீஸாரின் நடவடிக்கைகளால் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது.
வாக்குப் பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மதுரை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டுள்ளது.
வரும் 29ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை துணை ராணுவ பாதுகாப்பு இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications
