நைஜீரியாவில் கடத்தப்பட்ட தமிழகபொறியாளர்கள் இருவர் விடுதலை
நாகர்கோவில்:நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.
நைஜீரியாவில் எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் அடிக்கடி கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 16ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆண்டனி மாறன், முருகன் ஆகிய இரு நாகர்கோவில் பொறியாளர்களும், பிரான்ஸ், இங்கிலாந்து, ஹாலந்து நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கடத்தப்பட்டனர்.
ஆண்டனி மாறன் திங்கள்சந்தை என்ற பகுதியையும், முருகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவரும் ஆவர். இவர்களை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக என்ஜீனியர்களைத் தவிர மற்றவர்களை தீவிரவாதிகள் விடுவித்து விட்டனர். இதனால் பதட்டம் அதிகமாகியது. இருவரின் நிலை என்ன என்பது குறித்து அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகமடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11 நாட்களாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இரு பொறியாளர்களும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இருவரிடமும் நைஜீரிய போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
விடுதலையான முருகன் உடனடியாக தொலைபேசி மூலம் தனது மனைவி கிருஷ்ணகுமாரியிடம் பேசினார். அதேபோல, ஆண்டனியும் தனது மனைவி சுஜாவுடன் போனில் பேசினார். இருவரும் பத்திரமாக மீண்டதால் இருவரது குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications