எஸ்.ஐக்கு அடி, உதை-சட்டை பேண்ட் கிழிப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்காக சென்றபோது தங்களை மனு கொடுக்க விடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சப் இன்ஸ்பெக்டரை அடித்து, உதைத்து அவரது பேண்ட், சட்டையைக் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள பூபதி புரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியைச் சுற்றிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வந்தனர். அப்போது சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் அவர்களைத் தடுத்து நிறுத்தி இத்தனை பேர் போகக் கூடாது. ஐந்து பேர் மட்டுமே போகலாம் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமுற்ற பொதுமக்கள் திண்டுக்கல்-கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்களைக் கலைந்து போகக் கூறியுள்ளார் சுரேஷ். இதைத் தொடர்ந்து அவருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த பொதுமக்கள் சப் இன்ஸ்பெக்டரை அடிக்க ஆரம்பித்தனர். சரமாரியாக அடித்து உதைத்த அவர்கள் சுரேஷின் சட்டை, பேண்ட்டையும் கிழித்து விட்டனர். உடனடியாக அருகில் இருந்த போலீஸார் குறுக்கிட்டு சுரேஷைக் காப்பாற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications