அமெரிக்க அணு சக்தி கப்பலை எதிர்த்து சென்னையில் போராட்டம்
திருநெல்வேலி:சென்னைக்கு ஜூலை 3ம் தேதி வருகை தரவுள்ள யுஎஸ்எஸ் நிமிட்ஸ், அணு சக்தி கப்பலை எதிர்த்து 2ம் தேதி சென்னையில் இடது சாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முக்கியப் போர்க் கப்பல்களில் ஒன்று நிமிட்ஸ். அணு சக்தியால் இயங்கும் இந்தக் கப்பலில் இரு அணு உலைகள் உள்ளன. ஈராக் போரில் இந்தக் கப்பல் மிகவும் முக்கிய பங்கு வகித்தது.இந்தக் கப்பலை பயன்படுத்தித்தான் அமெரிக்க விமானப் படை விமானங்கள் இயங்கி வந்தன. உலகின் மிகப் பெரிய அணு சக்திக் கப்பல்களில் நிமிட்ஸும் ஒன்று.
இந்தக் கப்பலால் கதிரியக்க ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுவதால், இக்கப்பலை தங்களது நாட்டுக்குள் வர பல நாடுகளும் அனுமதிப்பதில்லை. ஆஸ்திரேலியாவோ, எங்களது கடல் பகுதி பக்கம் கூட வரக் கூடாது என்று கண்டிப்பாக கூறியுள்ளது.
இந்த நிலையில், நிமிட்ஸ் கப்பல் வருகிற ஜூலை 3ம் தேதி சென்னைக்கு வருகிறது. நான்கு நாட்கள் சென்னையிலேயே நிறுத்தப்படவுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக, இடது சாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தக் கப்பலால் சென்னை நகரத்திற்கு மட்டுமல்லாமல் தென் மாநிலங்கள் முழுமைக்கும் கதிரியக்க ஆபத்து உள்ளதாக இந்தக் கட்சிகள் கூறியுள்ளன.
நிமிட்ஸ் கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இவை கோரியுள்ளன. ஆனால் இந்தக் கப்பல் வருவதால் ஒரு பிரச்சினையும் கிடையாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நெல்லை வந்த மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், செய்தியாளர்களிடம் பேசுகையில், நிமிட்ஸ் வழக்கமான போர்க் கப்பல் அல்ல. ஈராக்கில், பல லட்சம் அப்பாவிகளைக் கொல்ல தளமாக பயன்படுத்தப்பட்ட கப்பல் இது.
இந்தக் கப்பல் இந்திய எல்லைக்குள் நுழையவேக் கூடாது. ஆனால் மத்திய அரசு எங்களது கோரிக்கையை கேட்பதாக இல்லை. எனவே ஜூலை 2ம் தேதி சென்னையில் இடது சாரிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைப் பெறுவார். அவர் குடியரசுத் தலைவராக வருவதன் மூலம் நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா வருகிற நாடாளுமன்றத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட மாட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம் என்றார் காரத்.












Click it and Unblock the Notifications