டெல்ஜிக்கு 13 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம்
புனே:
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் டெல்ஜிக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 102 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்யவும் புனே தனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய பல ஆயிரம் கோடி போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியான டெல்ஜி கடந்த 2002ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். புனே நகரில் வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்னர்.
அந்தக் காரில் கட்டுக் கட்டாக போலி முத்திரைத்தாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்தான் டெல்ஜி கைது செய்யப்பட்டார்.
போலி முத்திரைத் தாள் வழக்கில் பல்வேறு மாநிலத்தவர்களும் சம்பந்தப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. போலி முத்திரைத் தாள் மோசடி தொடர்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் மட்டும் 17 வழக்குகள் உள்ளன. அத்தனை வழக்குகளிலும் டெல்ஜிதான் முக்கியக் குற்றவாளி ஆவார்.
இதுவரை 5 வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார் டெல்ஜி. இந்த நிலையில், திடீரென தனது குற்றங்களை ஒப்புக் கொண்டார் டெல்ஜி. புனே சிறப்பு நீதிமன்றத்தில் தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்வதாக அறிவித்தார்.
இந்தப் பின்னணியில், புனே சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காலை டெல்ஜி தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக இருந்தது. இதையடுத்து டெல்ஜியும், வழக்கில் இன்னொரு குற்றவாளியான அவரது மனைவி ஷாகிதாவும் ஆஜராகினர். மற்ற குற்றவாளிகளும் ஆஜர் செய்யப்பட்டனர்.
அப்போது நீதிபதி முன்பு தான் செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டு அழுதபடி பேசினார் டெல்ஜி. தனக்கு எய்ட்ஸ் உள்ளதாகவும், தன்னை மன்னித்து விட்டுவிடும்படியும் அவர் கோரினார். அதேபோல, ஷாகிதாவும் தனக்கும் எய்ட்ஸ் உள்ளதாகவும், கணவர் செய்த குற்றத்திற்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.
ஆனால் அரசு வக்கீல் தாக்கரே வாதிடுகையில், இவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்கள் செய்த தவறுக்கு நீண்ட காலம் சிறையில் இருந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும். எனவே இவர்களுக்கு குறைந்தது 20 வருடங்கள் சிறைத் தண்டனையாவது வழங்க வேண்டும் என்றார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சித்ரா பேடி, மாலையில் தண்டனை விவரத்தை அறிவிப்பதாக தெரிவித்தார். பின்னர் மாலையில் நீதிமன்றம் கூடியது. அப்போது நீதிபதி சித்ரா பேடி தண்டனை விவரத்தை அறிவித்தார்.
அதன்படி, டெல்ஜிக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மொத்தமாக ரூ. 102 கோடிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இதுதவிர டெல்ஜியின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இதற்காக நீதிமன்றம் ஒருவரை நியமித்து சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 42 பேருக்கும் அதிகபட்சம் 6 ஆண்டு தண்டனையும், அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவரை இந்த அளவுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனையைக் கேட்ட டெல்ஜி, நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார், தனக்கு நீதி கிடைத்து விட்டதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications