காமெடி டிரஸ்ஸில் காமராஜர்-சரத் ரசிகர்கள் கொதிப்பு
சென்னை:
இந்தியா டுடே பத்திரிக்கையில் பெருந்தலைவர் காமராஜரை கேலி செய்து படம் போட்டதை எதிர்த்து சரத்குமார் ரசிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா டுடே இதழில் நாடு சுதந்திரமடைந்த 60 வருடங்கள் என்ற தலைப்பில் பல்வேறு தலைவர்களின் படங்களைப் போட்டுள்ளனர். அதில் காமராஜருக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆடை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
காமராஜரை அவமதிக்கும் வகையில் இந்தப் படம் இருப்பதாக கூறி அகில இந்திய சரத்குமார் நற்பணி மன்றம் சார்பில் நேற்று சென்னை பெருங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இந்தியா டுடே இதழை எரிக்க முயன்றனர். அப்போது போலீஸார் குறுக்கிட்டு அவர்களைக் கைது செய்தனர்.
போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய சரத்குமார் நற்பணி மன்ற தலைவர் சுந்தரேசன் கூறுகையில், காமராஜருக்கு காமெடி டிரஸ்ஸைப் போட்டு பிரசுரித்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
காமராஜர் இந்திய அரசியலில் அசைக்க முடியாத, மறக்க முடியாத தலைவர். அவரை இப்படி சித்தரித்திருப்பது வேதனை தருகிறது. பத்திரிக்கையின் உள்ளே காமராஜர் குறித்து எதையும் சொல்லவில்லை.
லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய இரு பிரதமர்கள் உருவாக காமராஜர்தான் காரணம். அரசியலில் கிங் மேக்கராக திகழ்ந்தவர் காமராஜர்.
அப்படிப்பட்டவரை இப்படி சித்தரித்து வெளியிட்டதற்காக இந்தியா டுடே இதழ் மன்னிப்பு கேட்க வேண்டும்.அதுவரை போராடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications