கோடநாடு எஸ்டேட்: ஜெ. தரும் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை

2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட நான் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, எனக்கும் கோடநாடு எஸ்டேட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள நீண்ட விளக்க அறிக்கை:

கடந்த மே மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நான் சில நாட்கள் ஓய்வுக்காக தங்கியதால், அதை பிரச்சினை ஆக்கும் முயற்சியில் தொடர்ந்து அதுகுறித்து பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி.

இந்த எஸ்டேட் என்னுடையதே அல்ல என்றும் அந்த எஸ்டேட் சசிகலாவுக்குச் சொந்தமானது என்றும் நான் சொன்னதாக கேள்வி எழுப்புகிறார்கள்.

முதலில் இதுகுறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1996ம் ஆண்டு என்மீதும் இன்னும் சிலர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தபோது அதில் கோடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டது. அப்போது எனக்கும், அந்த எஸ்டேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அந்தக் கால கட்டத்தில் அந்த எஸ்டேட் எனக்குச் சொந்தமானதல்ல, சசிலகலாவுக்கும் வேறு சிலருக்கும் சொந்தமானது என்று கூறினேன். அதுதான் உண்மை.

பல ஆண்டுகள் கழித்து 2000ம் ஆண்டு தொடக்கத்தில், கோடநாடு எஸ்டேட் நிறுவனத்தசில் நானும் ஒரு பார்ட்னராக இணைந்தேன். அதன் பிறகு, அதாவது 2006ம் ஆண்டுக்குப் பிறகு அதில் எனக்குப் பங்கு இல்லை என்று நான் சொன்னதே இல்லை.

கோடநாடு எஸ்டேட்டை ஆரம்பத்தில் கிரேக் ஜோன்ஸ் உள்ளிட்ட இரண்டு ஆங்கிலேயர்களும், அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து அறக்கட்டளைகளும் அமைந்த ஒரு பங்குதாரர் நிறுவனம் வாங்கியது.

31.3.1993 அன்று நிலவரப்படி கோடநாடு தேயிலை எஸ்டேட் கம்பெனி வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் மட்டும் ரூ. 7 கோடி ரூபாயாக இருந்தது. பின்னர் 1994 இறுதியில் ராதா வெங்கடாச்சலம் மற்றும் அவருடைய உறவினர்கள் 2 பேரும் இதில் பங்குதாரர்களாக இணைந்தனர்.

பின்னர் 95ல் கிரேக் ஜோன்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் இதிலிருந்து விலகிக் கொண்டனர். 1995 ஜூன் மாதத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இதில் பங்குதாரர்களாக இணைந்தனர். பின்னர் 1996 செப்டம்பரில் சுதாகரன் விலகிக் கொண்டார்.

இத்தனை மாற்றங்கள் செய்த பிறகும் கடன்களை செலுத்த முடியாததால், அந்த நிறுவனத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 2000மாவது ஆண்டில் நான் இந்த நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்தேன். 2001ல் இளவரசி இந்த நிறுவனத்திலிருந்து விலகினார்.

ஆகவே நான் இந்த சொத்தை வாங்கியதாக கூறுவது தவறானது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இந்த எஸ்டேட்டை மீட்டு காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் இதில் பங்குதாரராக இணைந்தேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனத்திலிருந்து நான் ஒரு ரூபாயைக் கூட எடுத்துக் கொடதில்லை. எந்தப் பண லாபமோ, ஆதாயமோ நான் பெற்றதில்லை.

எஸ்டேட் என்னுடையது அல்ல என்று நான் சொன்னது 1996ல்தான். அப்போது எனக்கும் இந்த எஸ்ட்டேக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இதில் சேர்ந்தது 2000மாவது ஆண்டில்தான்.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தேர்தலில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், 2006 ஏப்ரல் மாதம் நான் இந்த நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டேன். நான் விலகியபோது நிறுவனத்தின் கணக்குகள் முடிக்கப்பட்டபோது, இழப்பில் அதாவது நஷ்டத்தில் எனது பங்காக நான் செலுத்த வேண்டிய தொகை ரூ. 1.93 கோடி என கணக்கிடப்பட்டது.

ஆக, நான் இந்த எஸ்டேட்டால் எந்தப் பயனும், லாபமும் அடையவில்லை. மாறாக, நான் இந்த நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 1.93 கோடி என்பதுதான் உண்மை.

இந்த நிறுவனத்திலிருந்து விலகிய பின்னர்தான் நான் சட்டசபைத் தேர்தலில் 2006, ஏப்ரல் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தேன். வேட்பு மனு தாக்கல் செய்தபோது நான் கோடநாடு எஸ்டேட்டில் பங்குதாரராக இல்லை.

எனவே எனது சொத்து விவரக் கணக்கில் கோடநாடு எஸ்டேட்டை நான் காட்டவில்லை. ஆகவே எந்தத் தவறும் நடக்கவில்லை. எந்த உண்மையையும் மறைக்கவில்லை. பொய்யான தகவல்களையும் தரவில்லை.

சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு, தொடர்ந்து எஸ்டேட் பல பிரச்சினைகளை சந்தித்து வந்ததால், பங்குதாரர்கள் நான் மீண்டும் இணைந்தால் நல்லது என்று கூறியதால், 2006 ஜூன் மாதம் மீண்டும் பங்குதாரராக இணைந்தேன். அதன் பின்னர் தொடர்ந்து கோடநாடு தேயிலை எஸ்டேட்டின் பங்குதாரராக இருக்கிறேன்.

எஸ்டேட் வளாகத்தில் அனுமதி பெறாமல் எந்தக் கட்டடமும் கட்டப்படவில்லை. முறையாக அனுமதி பெற்றே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதற்குரிய வரியும் கட்டடப்பட்டு வருகிறது.

2,000 மரங்களை வெட்டி விட்டு கட்டடங்களை கட்டியுள்ளதாக கூறுகிறார்கள். இது நூற்றுக்கு நூறு பொய்யான தகவலாகும்.

ஆங்கிலேய முதலாளி கட்டியிருந்த பழைய கட்டடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில்தான் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதைச் சுற்றிலும் இருந்த மரங்கள் அப்படியேதான் உள்ளன.

30 வருடங்களுக்கும் மேலான, முதிர்ந்து காய்ந்து போன சில்வர் ஓக் மரங்கள்தான் வெட்டப்பட்டுள்ளன. அதுவும் அனுமதி பெற்றுத்தான் வெட்டப்பட்டுள்ளன.

தேயிலை எஸ்டேட் வைத்துள்ளவர்கள் தங்களது விருப்பம் போல மரங்களை வெட்ட முடியாது. மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி பெற்றுத்தான் வெட்ட முடியும். பல விதிமுறைகளும் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் 2,000 மரங்களை வெட்டி விட்டதாக கூறுவது அண்டப் புளுகாகும்.

இதுதவிர 90 அறைகள் கட்டப்பட்டுள்ளன, சுடு நீர் நீச்சல் குளம் உள்ளது என்று கற்பனைக்கும் எட்டாத செய்திகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதுவும் முழுப் பொய்யாகும்.

இப்படி பொய்யான, அவதூறான, தவறான செய்திகளை, பழிகளை சுமத்தியவர்கள் மீதும், அவற்றை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+