பிரதீபா சொத்துக் கணக்கு-அத்வானி கோரிக்கை
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டீல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி மனோகர்லால் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், பிரதீபா பாட்டீல் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றசாட்டுகள் இருக்கின்றன. அதனால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனு நாளை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் , தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் தங்கள் சொத்து கணக்கை காட்ட வேண்டும். ஆனால் பிரதீபா பாட்டீல் தனது சொத்து கணக்கை காட்டவில்லை. அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந் நிலையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மனுக்கள் பரிசீலனையில் பிரதீபா பாட்டீல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications