கோடநாடு எஸ்டேட்: ஜெயலலிதாவின் விளக்கம்புளூகு மூட்டை- கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா தனது அறிக்கைகளில் கூறியுள்ள புளூகு மூட்டைகளை எல்லாம் தமிழக மக்கள் தட்டி எழுப்பியுள்ளன. அதற்கு மதுரை இடைதேர்தல் தக்க சான்று என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கோடநாடு எஸ்டேட் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி கேட்டு நீண்ட நாளுக்கு பிறகு இன்று ஜெயலலிதா 6 பக்கத்திற்கு ஒரு நீண்ட அறிக்கையினை அனுப்பியுள்ளார்.
இவ்வளவு நாள் தாமதித்திற்கு அறிக்கையில் அவரே அளித்துள்ள காரணம், தேவையான ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்க நாட்கள் தேவைப்பட்டது என்பது. இதிலிருந்தே ஆதாரங்களை எல்லாம் சேகரித்து கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
கருணாநிதி, ஸ்டாலின், ஆற்காடு வீராச்சாமி, சுப்ரமணிய சுவாமி போன்றவர்களும், பத்திரிக்கையாளர்களும் எழுப்புகின்ற கேள்வி, இந்த கோடநாடு எஸ்டேட் என்னுடையதல்ல என்றும், இந்த எஸ்டேட் சசிகலாவிற்கு சொந்தமானது என்றும் நான் சொன்னதாக கேள்வி எழுப்புகிறார்கள் என தன்னுடைய அறி்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அடுத்த பத்தியில் 1996ம் ஆண்டு கருணாநிதி அரசு என் மீதும், இன்னும் சிலர் மீதும் சொத்துகுவிப்பு வழக்கு தொடர்ந்தபோது அதில் கோடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டது. அப்போது கோடநாடு எஸ்டேட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த காலகட்டத்தில் கோடநாடு எஸ்டேட் என்னுடையதல்ல. அது சசிகலாவிற்கும் வேறு சிலருக்கும் சொந்தமானது என்று கூறினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் பத்தியிலே கோடநாடு மாளிகை பற்றி மற்றவர்கள் சொன்னதை அவரே தனது அறி்க்கையில் வெளியிட்டிருப்பதும், அது சசிகலாவின் சொத்து என கூறியிருப்பதும் பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது என்பதை காட்டுகிறது.
கடந்த மே மாதம் 31ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தனியாருக்கு சொந்தமான இடங்களில் நான் சென்று தங்கினால் கூட அந்த இடங்களை குறிவைத்து செயல்படுவது என்பது கருணாநிதியின் முழு நேர வேலையாக உள்ளது. நான் தங்கின பாவத்திற்கு அந்த இடத்தின் சொந்தக்காரர்களை இந்த மைனாரிட்டி திமுக அரசு படாதபாடு படுத்துகிறது என்றார்.
இதிலிருந்து ஜெயலலிதா தங்கியிருந்த கோடநாடு எஸ்டேட் அவருக்கு சொந்தமானதல்ல, வேறு யாரோ தனியாருக்கு சொந்தமானது என்று சொல்லியிருக்கிறார். அவ்வாறு வேறு யாருக்கோ சொந்தமான இடம் என கூறிய ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறுகிறார், 2000ம் ஆண்டு தொடக்கத்தி்ல கோடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் நான் பார்டனராக இணைந்தேன். 2000ம் ஆண்டுக்கு பிறகு அதில் எனக்கு பங்கு இல்லை என நான் சொன்னதே கிடையாது என்கிறார்.
ஆனால் கடந்த மே மாதம் 31ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் சென்று தங்கியதாக சமாளிப்பு பொய்யை கூறிவிட்டு இப்போது நான் அவ்வாறு சொல்லவே இல்லை என கூறினால் மக்கள் என்ன செவிடு, குருடு, ஊமைகளா அல்லது சிந்தனையற்ற ஜீவன்களா.
மேலும் அவர், 1995ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பார்ட்னராக இருந்த நிறுவனத்தில் இணைந்தார்கள் என கூறியிருக்கிறார். 1995ம் ஆண்டு ஆட்சியில் இருந்தது யார், சாட்சாத் இந்த ஜெயலலிதா தானே. அவரது ஆட்சிகாலத்தில் சசிகலா இந்த கோடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் இணைந்தார் என்று ஜெயலலிதா இப்போது ஒப்புக் கொள்ளும் நிலையில் சசிகலா யார், அவருடைய உடன்பிறவா சகோதரி தானே.
அவருடைய உறவினர்கள் தானே இளவரசியும், சுதாகரனும், அன்றைய முதல்வர் ஜெயலலிதா வீட்டில் அவருடன் இருக்கக் கூடியவர்கள் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் கோடநாடு எஸ்டேட் பெறப்பட்டது என்றால் என்ன பொருள். இவ்வளவு பெரிய எஸ்டேட்டில் பங்குதாரர்களாக சேர்வதற்கு அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் எப்படி கிடைத்தது. முதல்வர் வீட்டிலிருக்கும் ஒருவர் பெயரில் இவ்வளவு பெரிய சொத்து சேர்க்கப்பட்டது என்றால் அதற்கு பெயர் பினாமி தானே.
இது மட்டுமல்லாமல் அப்போது கோடநாடு நட்டத்தி்ல இயங்கி வந்ததாகவும் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். எந்த பைத்தியகாரனாவது நட்டத்தில் இயங்கி, கடனிலுள்ள நிறுவனத்தை பல கோடி கொடுத்து வாங்குவானா. அளவிற்கு மீறி கையில் கொள்ளை பணம் வைத்திருப்பவர்கள் தானே நட்டத்தில் இயங்கும் நிறுவனத்தை வாங்குவார்கள். அப்படி வாங்கப்பட்ட சொத்துதான் இது என்பது அம்மையாரின் அறிக்கை தெளிவாக விளக்குகிறது.
2000ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நான் இந்த நிறுவனத்தில் பார்ட்னராக சேர்ந்தேன் என கூறிவிட்டு, அடுத்த சில பத்திகளில் நான் சொத்தை வாங்கினேன் என கூறுவது தவறான கூற்றாகும் என கூறியிருப்பது, எந்த வகையில் பொருந்துகிறது என அவருக்கு இந்த அறி்க்கையை எழுதி கொடுத்தவர்தான் விளக்க வேண்டும்.
இதேபோல் அவ்வவப்போது கணக்குகள் காட்டப்பட்டு வருவமானவரித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என கூறியுள்ளார். ஆனால் அரசியல் தலையீட்டால் பழி வாங்கும் நடவடிக்கையாக வருமானவரித்துறை இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல்களை தாக்கல் செய்திருக்கிறது. அவை நிலுவையிலுள்ளன என முரண்பட்ட தகவல்களை நாம் அறிய முடிகிறது.
2000ம் ஆண்டு முதல் கோடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த விவரத்தை 2006ம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுவில் ஏன் குறிப்பிடவில்லை என கேட்கப்பட்டதற்கு, இப்போது விழித்து கொண்ட ஜெயலலிதா 2006ம் ஏப்ரல் மாதத்தில் தான் அதிலிருந்து விலகிக் கொண்டதாக அறிக்கையில் கூறியுள்ளார்.
2006ம் ஆண்டு ஏப்ரலில் கோடநாடு நிறுவனத்திலிருந்து விலகி கொண்டதாக கூறும் அவர் 2006ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் அதே நிறுவனத்தில் பார்ட்னராக இணைந்ததாகவும், பார்ட்னராக நீடிப்பதாகவும் கூறுகிறார். கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிறுவனத்தில் 2006ம் ஆண்டு ஏப்ரலில் பங்குதாரராக இருந்து விலகியதாகவும், மீண்டும் ஜூன் மாதம் இணைந்ததாகவும் சொல்வது யாரை ஏமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை.
நான் இந்த எஸ்டேட்டில் பெருமளவு பண முதலீடு செய்திருக்கிறேன் என்ற தவறான தகவல் எங்கிருந்து கிடைத்தது என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெயலலிதா. பின்னர் அதே அறிக்கையில் கோடநாடு நிறுவனத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் கணக்கில் காட்டப்பட்டு வருமானவரித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என கூறியுள்ளார். முதலில் ஒப்புக் கொண்டு பின் இல்லை கூறுவதை யாராவது காதில் பூ வைத்தவர்கள் தான் அவரது அறிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்.
நான் ஆதாரத்தோடும், ஆவணங்களோடும் அவர் முதலீடு செய்ததை வெளியிட்ட பிறகு தான் அதை ஒப்புக் கொண்டாரே தவிர அதற்கு முன் தனக்கு வேண்டியவருக்கு சொந்தமான இடம் என சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் கருணாநிதியின் குடும்ப பெண் உறுப்பினர் எஸ்டேட் வாங்கியிருப்பதாகவும், அதற்கு பணியாளர்களை திரட்ட அதிகாரிகள் முற்பட்டதாகவும் கற்பனை கதைகளை கூறியிருந்தாரே அது இப்போது என்னவாயிற்று.
அங்கே கட்டப்படுகின்ற புதிய வீட்டிற்கு அனுமதி பெறவில்லை என கருணாநிதியும், அவரது கூட்டாளிகளும் பொய் சொல்கின்றனர் என்றார். அந்த வீட்டிற்கு 1995ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராதா வெங்கடாசலம் பார்ட்னராக இருக்கும்போது அனுமதி கோரப்பட்டது என்று கூறியுள்ளார்.
அங்கே கட்டப்படுவது புதிய வீடு என ஒப்புக் கொள்கிறார். தற்போது கட்டப்படும் புதிய வீட்டிற்கு 1995ம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது என்கிறார். ஓராண்டிற்கு மட்டுமே பொருந்தக் கூடிய பழைய அனுமதியை வைத்துக் கொண்டு 12 ஆண்டுகள் கழித்து புதிய கட்டிடம் கட்டுவதை எந்த சட்டம் அனுமதியளிக்கிறது.
கோடநாடு எஸ்டேட் சொத்துகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ளது. புதிதாக கட்டிடம் கட்டுவது என்றால் நீதிமன்றத்தின் அனுமதி வாங்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்டிருக்கிறதா. அவ்வாறு நீதிமன்றத்தில் பொறுப்பில் இருக்கும் சொத்தில் தன் இஷ்டம் போல் விலக்கி கொள்வதும், சேர்த்து கொள்வதும் சரியா. இந்த விவகாரங்கள் நீதிமன்ற விசாரணையில் அம்மாவின் அண்டபுளுகுகள் எல்லாம் அம்பலத்திற்கு வரும்.
ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதிக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தற்போது நீண்ட அறிக்கையினை அளிக்க காரணம், கருணாநிதிக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது என ஒப்புக் கொண்டதால்தானா.
கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலிலதாவிற்கு உரிமை இருக்கிறதா என சிலர் சந்தேகப்பட்டு கொண்டிருந்தார். அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவரே அறிக்கையில் திட்டவட்டமாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தொகை எங்கிருந்து வந்தது என்பதை தான் இந்த நாடும் மக்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கொள்ளையடித்த பணம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தான் மதுரை மேற்கு தொகுதி இடைதேர்தல் முடிவில் நமது கூட்டணி பெற்ற வாக்குகளும், ஜெயலலிதா கூட்டணி பெற்ற வாக்குகளும் தமிழகத்திற்கு எடுத்து காட்டி கொண்டிருக்கின்றன.
கெட்டிகாரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். ஆனால் ஜெயலலிதா புளுகு மூட்டைகளும் வண்டவாளங்களும் தமிழ்நாட்டிலுள்ள மக்களை தட்டி எழுப்பியே இருக்கின்றன. அதற்கு சரியான சான்றுதான், முந்தைய தேர்தல் வெற்றி பெற்ற மதுரை மேற்கு தொகுதியில், தற்போது 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய விவகாரம்.
ஜெயலலிதாவின் அறிக்கைகளை வரிசைப்படுத்தி படித்து பார்த்தாலே அவற்றில் காணப்படும் முரண்பாடுகள், அவரது சுயரூபத்தை காட்டி கொடுத்து விடும் என்கிற உண்மையை உணராத சில ஏடுகள் அரும்பாடுபட்டு அவற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை காணும் போது பத்திரிக்கா தர்மம் படும்பாடு குறித்து பதற்றமடையாமல் இருக்க முடியவில்லை, பாழாகிறதே அரசியல் பண்பாடு என வேதனைப்படாமலும் இருக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications