பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்பிரதீபா வெல்ல வேண்டும்: கருணாநிதி
சென்னை:என் மீது சுமத்தப்பட்டு வரும் களங்கங்களை புறக்கணித்து விட்டு மக்களுக்கு சேவையாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தேசப்பற்றுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்றுவேன் என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் நேற்று சென்னை வந்தார். சென்னையிலிருந்து தனது பிரசாரத்தையும் தொடங்கினார்.
முன்னதாக தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்த அவரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசினர். அவர்களிடம் தனக்காக வாக்களிக்குமாறு பிரதீபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.
பின்னர் இரவு முதல்வர் கருணாநிதி பிரதீபா பாட்டீலுக்கு விருந்தளித்துக் கெளரவித்தார். நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் பேசுகையில், இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை எனக்குக் கிடைக்கும்.
இந்தியா சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கும் பெருமை ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும். இது எனக்கான தேர்தலாக நான் நினைக்கவில்லை. நான் பெறும் வெற்றி இந்திய மக்கள் பெறும் வெற்றியாகும்.
நாம் இளைய இந்தியாவில் வாழும் பழமையான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை நவீனப்படுத்துவதற்கும், சமூக பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வருவதற்கும் அரசியல் அமைப்புச் சட்டங்களே அடிப்படையாக உள்ளன.
மதச்சார்பின்மை, சமத்துவம், மத ஒற்றுமை போன்றவைதான் நமது நாட்டுக்குத் தேவையான அஸ்திவாரமாகும். பொருளாதார வளர்ச்சியை அனைவரும் பெற வேண்டும். ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், இளைஞர்கள், பெண்கள் அனைவரும் மேம்பாடு அடைய வேண்டும்.
சில நாட்களாக என்னைப் பற்றி குற்றச்சாட்டுக்கள் எழுதப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றன. தீய நோக்கத்தோடு எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு நான் அளிக்கும் ஒரே பதில், இவை அனைத்தும் பொய்யும், அடிப்படையும் அற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்.
என் மீது சுமத்தப்பட்டு வரும் களங்கங்களை புறக்கணித்து விட்டு மக்களுக்கு சேவையாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தேசப்பற்றுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்றுவேன் என்றார் பிரதீபா பாட்டீல்.
முதல்வர் கருணாநிதி பேசுகையில், அம்மையாரை சென்னைக்கு அழைத்து பெரிய வரவேற்பையும், பேரணியையும் நடத்திக் காட்டி நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கின்ற ஆதரவு மட்டுமல்ல இந்தியாவின் மிக முக்கிய மாநிலமான தமிழகத்தில் உள்ள மக்களும் அவரை ஆதரிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிற வகையில் நிகழ்ச்சிகள் மிக நிறைவாக நடந்து முடிந்திருக்கின்றன.
அடுத்த கட்டமாக பிரதீபா பாட்டீலை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். சில கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக செய்திகள் வந்துள்ளன. புறக்கணிக்காமல் இருந்திருப்பார்களேயனால், அந்த வாக்குகள் நமக்கேதான் கிடைக்கும்.
புறக்கணிக்கிறோம் என்று புத்திசாலித்தனமாக ஒரு தந்திரத்தைக் கையாண்டு, அதே நேரத்தில் ஒரு மனதாக தமிழகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்மையாருக்கு வாக்களித்தார்கள் என்ற செய்தியை உலகத்துக்கு தருகிற ஒரு வாய்ப்பை வழங்கி இருப்பதாகவே நினைக்கிறேன்.
உங்களது வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல், அத்தனையும் நமது வேட்பாளர் அம்மையாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறேன் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ரகுபதி, ராஜா, ராதிகா செல்வி, வேலு, தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, எம்.பிக்கள் கனிமொழி, டாக்டர் காயத்ரி தேவி, கோவிந்தசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தி.க. தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக கூட்டணி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications