சிவகங்கை கார் வெடிகுண்டு தயாரித்த என்ஜீனியர்!!
சிவகங்கை:
சிவகங்கை நகரசபை தலைவரை கொல்ல வெடிகுண்டு தயாரித்து கொடுத்த என்ஜீனியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் காரில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். அவருடை டிரைவர் பாண்டி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கேபிள் டிவி தொழில் போட்டியால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் நிலவுவதால் சிவகங்கையில் உள்ள கேபிள் டிவி நெட்வொர்க் உரிமையாளர்கள், அதன் ஊழியர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் சிவகங்கையில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருந்த பாலா என்கிற பாலசந்தருக்கும் இந்த கொலைக்கும் முக்கிய தொடர்புள்ளது தெரிய வந்தது.
டிப்ளமோ என்ஜீனியரிங் படித்துள்ள இவர் சென்னையில் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் வேலை பார்த்தவர்.
முருகனை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் ட்ரை நைட்ரோ டெலிகான் என்ற வெடி மருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
இது பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும். ரிமோட் மூலம் கைதேர்ந்த நிபுணர்களால் மட்டுமே இதனை வெடிக்க வைக்க முடியும்.
முருகனுக்கு எதிரியான திமுகவைச் சேர்ந்த மந்தகாளைக்கு இந்த பாலா நெருங்கிய நண்பர். முருகன் கொல்ல மந்தகாளை இவரை அணுகியதாகத் தெரிகிறது.
இதையடுத்து வெடிகுண்டை தயாரித்துக் கொடுத்துள்ளார் பாலா.
இந்த படுகொலை சம்பவம் நடந்த மறுநாளே பாலா தலைமறைவாகிவிட்டார். அவருடைய வங்கு கணக்கை போலீசார் சோதனையிட்டபோது திடீரென அதிக அளவில் பணம் எடுத்திருப்பது தெரிய வந்தது.
பாலா சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
மதுரை வங்கி ஒன்றில் ஜவுளி நிறுவன ஊழியர்கள் ரூ.17 லட்சத்தை டெபாசிட் செய்ய சென்றபோது அவர்களை வழிமறித்துக் கொள்ளையடித்த சம்பவத்தில் பாலா கைது செய்யப்பட்டு சில காலம் சிறையிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications