நிமிட்ஸின் உதவி கப்பலில் ஊடுருவ முயன்ற3 மீனவர்கள் கைது
சென்னை:அமெரிக்காவின் நிமிட்ஸ் கப்பலுக்கு உதவியாக வந்த சிறிய கப்பலில் ஊடுருவ முயன்ற 3 மீனவர்கள் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வந்துள்ள அமெரிக்க அணு சக்தி விமானந் தாங்கி கப்பலான நிமிட்ஸ் கடற்கரையில் இருந்து 2 கிமீ தொலைவில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலை சுற்றி பாதுகாப்புக்காக 32 சிறிய கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை நிமிட்ஸை கப்பலை சுற்றி 2 கிமீ சுற்றளவுக்கு நிற்கின்றன.
நேற்றிரவு கிளன் டிஎச்பி என்ற சிறிய கப்பல் நிமிட்ஸ் அருகே நின்றுக் கொண்டிருந்தபோது 3 பேர் அதில் ஏற முயற்சி செய்தனர்.
![]() |
இதைப் பார்த்த சிறிய கப்பல் கேப்டன் அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று கருதி கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மிதவை காவல் நிலையம் உஷார்படுத்தப்பட்டு உதவி கமிஷ்னர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
போலீஸாரை கண்டதும் அக் கும்பல் கப்பலிலிருந்து குதித்து தங்கள் படகில் தப்பித்துச் சென்றது.
ஒரு மணி நேரம் கடலில் அங்கும் இங்குமாக சென்றத அவர்களை போலீஸார் மடக்கினர்.
போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் காசிமேட்டை சேர்ந்த ரமேஷ்(35), கண்ணன்(32), பாஸ்கர்(32) என தெரிய வந்தது. இந்த மூன்று பேரும் குடிபோதையில் இருந்தனர்.
நாங்கள் மீன்கள் பிடிக்க சென்றபோது, விரித்த வலை சிறிய கப்பலில் சிக்கி விட்டது அதை மீட்பதற்காக கப்பலில் ஏறினோம் என்றனர்.
நிமிட்ஸ் கப்பல் வருகையின் காரணமாக பாதுகாப்பு கருதி, கப்பல் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை சுற்றி 5 கிமீ தூரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் ஊடுருவலை தடுக்க மிதவை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணித்து வருகின்றனர்.
இத்தகைய பாதுகாப்பு மீறி அவர்கள் மூவரும் எப்படி கப்பலுக்குள் ஊடுருவ முயன்றனர் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications