ஸ்காட்லாந்து விமான நிலைய தாக்குதல்:ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

பிரிஸ்பேன்:ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையம் மீதான தாக்குதல் மற்றும் லண்டன் கார் குண்டுகள் தொடர்பாக இந்திய டாக்டர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் சமீபத்தில் இரு கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்த நாளில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தில் காரில் வந்த இருவர் விமான நிலையம் மீது மோதி அதைத் தாக்க முயன்றனர்.

இந்த சம்பவத்தில் விமான நிலையத்திற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலத்த தீக்காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது அவர் பிடிபட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு டாக்டரிடமும் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு 27 வயதிருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இத்தகவல்களை தலைநகர் கான்பெராவில் தலைமை அரசு வழக்கறிஞர் பிலிப் ருட்டாக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவரின் பெயர் முகம்மது ஹனீப் என்று ஆஸ்திரேலிய வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்படி, சந்தேகப்படும் எவரையும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி கைது செய்து 3 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் நீதிமன்ற அனுமதியுடன் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்களது காவலில் காவல்துறை வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிகழ்வுகளை ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவர்ட் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு டாக்டர் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்காலிக பணி விசா மூலம் அவர் கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஆண்டு டாக்டராக பணிக்கு சேர்ந்தவர் அவர் என்றார்.

விசாரணை நடந்து வரும் இன்னொரு டாக்டர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

இந்திய டாக்டர் முகம்மது ஹனீப்பைக் கைது செய்யுமாறு இங்கிலாந்திலிருந்து வந்த தகவலைத் தொடர்ந்தே அவரை ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட டாக்டர் இந்தியாவில் படித்துள்ளார். பின்னர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில் சில காலம் இருந்துள்ளார். அதன் பின்னரே ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளார்.

பெங்களூரில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ பல்கலைக்கழகத்தில்தான் முகம்மது ஹனீப் கடந்த 2002ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.

தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் நல்ல பெயர் எடுத்தவர் இந்த டாக்டர். பிரிஸ்பேனிலிருந்து கோலாலம்பூர் செல்ல முயன்றபோது முகம்மது ஹனீப் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. அங்கிருந்து அவர் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+