சாகலாம் போல உள்ளது-நரேஷ்குப்தா வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தனது நடுநிலைமையை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் சந்தேகித்து விமர்சிப்பது வேதனையாக உள்ளது. பேசாமல் செத்து விடலாம் போல உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பாதுகாப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இதேபோல தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்து விட்டு திமுகவின் நிர்ப்பந்தத்தால் பின்வாங்கி விட்டதாக அதிமுகவும் குற்றம் சாட்டியது.

Chief Electoral Officer Naresh Gupta

இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா நேற்று செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். அப்போது மிகவும் உருக்கமாக பேசினார் குப்தா.

நரேஷ்குப்தா பேசுகையில், எனது நிலைப்பாட்டை விளக்கவே உங்களை திடீரென அழைத்துள்ளேன். 2005ம் ஆண்டு நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது கத்தை கத்தையாக வாக்காளர்களை சேர்க்க விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து தேர்தல் ஆணையம் விரைந்து செயல்பட்டது. அனைத்து தேர்தல் அதிகாரிகளையும் அழைத்து விண்ணப்பங்கள் சரியானவையா என்று சரி பார்த்தோம். ஒரே நேரத்தில் கத்தை கத்தையாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி செயல்பட்டு அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. இதன் பலனாக அந்த விண்ணப்பங்களில் மூன்றில் இரண்டு பங்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

பொன்னேரி தொகுதியைப் பொறுத்தவரை 8312 விண்ணப்பங்கள் வந்தன இதுதவிர தனியார்களிடமிருந்து 11 ஆயிரத்து 432 விண்ணப்பங்கள் வந்தன. மொத்தமாக 19 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 8742 விண்ணப்பங்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

போலி வாக்காளர்கள் சேர்ப்பு தொடர்பாக அதிமுக மீது 412, திமுக மீது 29, மதிமுக மீது 3, பாமக மீது 3, பாஜக மீது ஒரு புகாரும் என மொத்தம் 470 புகார்கள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்குகள் நடந்து வருகின்றன.

வாக்காளர் அடையாள அட்டை புகார்கள் தொடர்பாக வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலைப் பொறுத்தவரை தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக புகார்கள் கூறப்பட்டன. அதில் நான் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இன்னொரு தரப்போ, சிறிய விஷயங்களுக்கெல்லாம் கடும் நடவடிக்கை எடுத்தது என்கிறார்கள்.

நான் நடுநிலை தவறி விட்டதாகவும், பாகுபாடு காட்டியதாகவும் சிலர் கூறுகிறார்கள். இது எனக்கு மன வேதனை அளிப்பதாக உள்ளது. எனது நடுநிலையை யாராவது சந்தேகித்தால், அதற்கு சாவதே மேல் என நினைக்கிறேன்.

தேர்தல் ஆணையம் சிறு கூறு. இது ஜனநாயக நாடு. இது கூட சரியாக நடக்கவில்லையென்றால் ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புகார் சொல்லி புழுதி வாரித் தூற்றலாம். ஆனால் இது மனதுக்கு வேதனை தருகிறது.

சின்ன விஷயத்துக்கெல்லாம் பதவி விலக வேண்டும் என்கிறார்கள். இப்படியெல்லாம் பதவி விலக வேண்டுமானால் 100 தலைமை தேர்தல் அதிகாரிகள் இருந்தாலும் போதாது.

அரியலூர் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி பதவி விலக வேண்டும் என்று அப்போது கூறினார்கள்.

நான் 2500 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து வந்தவன். அங்கு அதிமுக, திமுக கட்சிகள் கிடையாது. அதனால் நான் யாருக்கும் பாகுபாடு காட்டத் தேவையில்லை என்றார் குப்தா.

நரேஷ்குப்தாவின் இந்த பரபரப்பு பேட்டி அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+