பிரதீபாவுக்கு இப்போதே புரோட்டோகாலா:என்னை தவிக்க விட்ட திமுக-ராமதாஸ் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுக சென்னையில் நடத்திய பேரணியில் எங்களை வெயிலில் உட்கார வைத்து விட்டனர். எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதீபா பாட்டீலுக்காக சென்னையில் திமுக நடத்திய பேரணி குறித்து கருத்து தெரிவித்தார்.

ராமதாஸ் கூறுகையில், சென்னையில் நடந்த மகளிர் பேரணியின்போது தென் சென்னை மாவட்ட திமுக நடத்திய பேரணி என்று மேடையில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.

எங்களையெல்லாம் எதிர் வரிசையில் வெயிலில் உட்கார வைத்து விட்டனர். எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது.

ஏன் இங்கே உட்கார வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது புரோட்டாகால்படி பெரிய தலைவர்கள்தான் மேடையில் அமர வேண்டும், அந்த அம்மையார் அருகில், சின்னத் தலைவர்களான நாங்கள் எல்லாம் உட்காரக் கூடாது என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

இங்கே எங்கே புரோட்டாகால் வந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு செய்திருந்தால், தேர்ந்தெடுக்கும் வரை இப்போது என்ன புரோட்டாகால் என்று தெரியவில்லை.

இந்தப் பேரணி மூலமாக 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்து விடப் போவதில்லை. அந்த அம்மையார் மூலமாகவும் கிடைக்கப் போவதில்லை. பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக வந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அவர் வெறுமனே கையெழுத்துப் போடுவார் அவ்வளவுதான். கையெழுத்து மட்டுமே போடும் நிலையில் இருப்பவர் அவர்.

33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமானால் லாலுஜி, சரத்யாதவ் ஜி, முலாயம்சிங் யாதவ் ஜி ஆகிய இந்த ஜிக்களை டெல்லியில் கூப்பிட்டு உட்கார வைத்து பேசி அந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அதை விட்டு விட்டு இங்கே பேரணி நடத்தி ஒரு பயனும் இல்லை. எந்தப் பிரயோஜனமும் இல்லை. நாங்கள் பல பேரணிகளை நடத்தி விட்டோம். டெல்லியில் நரசிம்ம ராவ் வீட்டு முன்பே பேரணி நடத்தி விட்டோம். ஒன்றும் நடக்கவில்லை. அதே நிலைதான் இப்போதும் என்றார் ராமதாஸ்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது ராமதாஸ் பேசுகையில், இது 27வது போராட்டம். ஆனாலும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் ஒன்றும் நடக்கவில்லை, எதுவும் நடக்கவில்லை என்கிறார். யாரும் எங்களுக்குப் புகார் தரவில்லை என்கிறார்.

இதுசம்பந்தமாக நான் அறிக்கை கொடுக்கும்போது நிதானமாகத்தான் அறிக்கை கொடுக்கிறேன் என்கிறார். அவருக்குத் தெரிந்த நிதானம் நமக்கெல்லாம் தெரிந்ததுதான். அவருடைய நிதானத்தைப் பற்றி, அவர் எப்போது நிதானமாக இருப்பார், எப்போதெல்லாம் நிதானத்தை இழப்பார் என்று முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறேன்.

என் மீது பாய்வதை விட உருப்படியாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் ஏழை மாணவர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியும். இந்த அரசோடு தோழமையாக இருக்கிற நாங்கள் இதற்காகப் போராட வேண்டுமா என்பதுதான் கேள்வி.

ஜெயலலிதா ஆட்சியை விட இப்போது உயர் கல்வித்துறை அலங்கோலமாக இருக்கிறது என்பது எங்களது குற்றச்சாட்டு. நான் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டவில்லை.

சட்டமன்றத்துக்குள் போய் போராடுவேன் என்று சொன்னதற்கு முதல்வர் பதில் சொல்லியிருக்கிறார். அவருக்கு சங்கடத்தைக் கொடுக்க வேண்டாம் என்றுதான் தெருவில் போராடுகிறோம் என்றார் ராமதாஸ்.

திமுகவின் பேரணியையும், பிரதீபா பாட்டீலையும் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது திமுக கூட்டணிக்குள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் சொன்னைதையெல்லாம் மறுக்கும் பாமக:

இந்நிலையில் திமுக நடத்திய மகளிர் பேரணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைத்துப் பேசவில்லை, கருத்தும் கூறவில்லை என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்கள் சென்னையில் நடைபெற்ற மகளிர் பேரணி குறித்தும், அதில் நடந்த சில நிகழ்வுகள் குறித்தும் கேட்டனர்.

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நீண்ட காலக் கோரிக்கை. எனினும் பல்வேறு கட்சிகளும் புதுப் புது பிரச்சினைகளைக் கிளப்பி முட்டுக்கட்டை போட்டுவருவதால், இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ராமதாஸ் எடுத்துக் காட்டினார்.

மற்றபடி முதல்வர் கருணாநிதியையோ அல்லது அவரது முன் முயற்சியுடன் நடந்த பேரணியையோ, அவரது இயக்கத்தினரையே குறைத்து மதிப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்துக்கள் சொல்லப்படவில்லை.

ஆனால் வழக்கம் போல ஏதாவது நடக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சில செய்தி ஊடகங்கள் ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்க முயற்சிக்கின்றன. இப்படிப்பட்ட செயல்களால் முதல்வர் கருணாநிதிக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இடையிலான நட்பை, தோழமையை குலைத்துப் போட முடியாது என்று கூறியுள்ளார் மணி.

ஒரு பக்கம் சண்டை.. இன்னொரு பக்கம் சமாதானம்.. என்னமோ நடக்குது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+