டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு;பணி நேரம் குறைப்பு-டெபாசிட்டுக்கு வட்டி!
சென்னை:டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க முதல்வர் உத்தரவுப்படி, உள்துறை, நிதித்துறை செயலாளர்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆகியோர் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனையின் இறுதியில் முதல்வரிடம் பல்வேறு பரிந்துரைகளை இந்த அதிகாரிகள் குழு அளித்தது. அதன்படி டாஸ்மாக் மதுக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியத்தை விட கூடுதலாக ரூ. 500ம், விற்பனையாளர்ளுக்கு ரூ. 400 கூடுதலாகவும், இதர ஊழியர்களுக்கு ரூ. 300 கூடுதலாகவும் வழங்க வேண்டும்.
பணியின்போது மரணமடையும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ரூ. 1 லட்சம் கருணைத் தொகைக்குப் பதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஊழியர்களிடமிருந்து பெறப்படும் காப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 3.5 சதவீத வட்டி வழங்கலாம் என்ற பரிந்துரைகள் முதல்வரிடம் அளிக்கப்பட்டன.
இந்த பரிந்துரைகளைப் பரிசீலித்த முதல்வர் கருணாநிதி அனைத்துமே ஏற்கப்படுவதாகவும், உடனடியாக அவை நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications