மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து:திமுக அரசு மீது ஜெ.பாய்ச்சல்
சென்னை:திமுக அரசின் அலட்சியப் போக்கின் காரணமாகவே, தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் கிடைக்காமல் போய் விட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை
திமுக அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட காரணத்தால்தான் தேனி, கன்னியாகுமரி, வேலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது. இதன் மூலம் 300 எம்.பி.பி.எஸ் இடங்களை தமிழகம் இழந்துள்ளது.
தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றும் பொருட்டு, கடந்த 2001-06ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் நான் தொடங்கினேன். இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தையும் பெற்றேன்.
எனது ஆட்சிக்காலத்தின்போது, இந்தக் கல்லூரிகளில் டாக்டர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த டாக்டர்கள் வேறு கல்லூரிகளுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இதனால் போதிய டாக்டர்கள் இல்லாத காரணத்தால், இந்தக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை இந்த ஆண்டிலிருந்து ரத்து செய்துள்ளது இந்திய மருத்துவக் கவுன்சில்.
நிலைமையின் முக்கியத்துவத்தைக் கருதி, மாணவர்களின் நலனைக் கருதி, தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கும் மீண்டும் அங்கீகாரம் வழங்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கோர வேண்டும். இதன் மூலம் பறிபோயுள்ள 300 மாணவர் இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் 300 மாணவர்களின் நலனை பாழ்படுத்திய பொறுப்பை திமுக அரசுதான் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications