தீக்குளிக்க முயன்ற அதிமுக எம்.எல்.ஏ
புதுச்சேரி:புதுவையில், கோவில் நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ ஓம் சக்தி சேகர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள குயவர்பாளையம் ஜெயங்கொண்ட மாரியம்மன் கோவிலுக்கு சமீபத்தில் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நேற்று பதவியேற்றனர். ஆனால் இந்த நிர்வாகிகள் நியமனத்திற்கு அதிமுக கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நிர்வாகிகள் பதவியேற்க வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மாநில அதிமுக செயலாளர் எம்.எல்.ஏ அன்பழகன், நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட அதிமுகவினர் அங்கு கூடினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கில் கூடிய அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சேகர், தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார்.
இதையடுத்து தலையிட்ட போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். சேகர் மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications