தேர்தலோடு திமுகவுடன் உறவு முடிந்துவிட்டது-ராமதாஸ் திடீர் அறிவிப்பு
திண்டிவனம்:கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு திமுகவுடனான உறவு முடிந்து விட்டது. திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸுக்கும், திமுக அரசுக்கும் இடையே சமீப காலமாக பல்வேறு விவகாங்களில் மோதல் வெடித்து வருகிறது. லேட்டஸ்டாக, உயர் கல்வித்துறை குறித்து ராமதாஸ் கடுமையாக விமர்சிக்க, அதற்கு படு சூடாக பதிலடி கொடுத்தார் அத்துறை அமைச்சர் பொன்முடி.
இந்த நிலையில், பிரதீபா பாட்டீலுக்கு சென்னையில் திமுக நடத்திய பேரணியில் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக குமுறினார் ராமதாஸ். இதற்கு முதல்வர் கருணாநிதி விரிவான, விளக்கமான பதிலை அளித்து, ராமதாஸின் பேச்சுக்கள் கூட்டணியின் நல்லுறவைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக சற்று காட்டமாகவே பதிலளித்தார்.
இந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் ராமதாஸ். அப்போது, திமுகவுடன், பாமகவுக்கு ஏற்பட்ட கூட்டணி கொள்கை, குறைந்தபட்ச பொது செயல் திட்டம், ஆட்சிப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படவில்லை.
இடப் பங்கீடு அடிப்படையில்தான் தேர்தலின்போது திமுக, பாமக இடையே கூட்டணி ஏற்பட்டது. அது தேர்தலுடன் முடிந்து விட்டது.
தேர்தலுக்குப் பிறகு திமுக ஆளும் கட்சி, பாமக எதிர்க்கட்சி. ஆனால் எதிரி கட்சி அல்ல, நட்புடன் கூடிய கட்சி. திமுக அரசுக்கு பாமக தனது முழு ஆதரவையும் தரும், ஐந்து ஆண்டு காலமும் திமுக ஆட்சி செய்யும் வகையில் பாமகவின் ஆதரவு தொடரும்.
எங்களது அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. திமுகவுக்கு சட்டசபையில் மெஜாரிட்டி பலம் இல்லை. எனவே இந்த அரசுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம், தொடர்ந்து அளிப்போம். இதுதொடர்பாக எழுதிக் கொடுக்கக் கூட நான் தயார்.
ஆனால் அதற்காக, பொறுப்பான ஒரு எதிர்க்கட்சியாக, மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து பாமக பேசக் கூடாது என்று அர்த்தம் அல்ல. மக்களைப் பாதிக்கும் விஷயங்களை பத்திரிகைகள், மீடியாக்கள் மூலமாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம், அவ்வளவுதான்.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைப் போலத்தான் பாமகவும் செயல்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது, அந்தக் கூட்டணியில் முக்கியக் கட்சியாக திமுக அங்கம் வகித்தபோது பலமுறை மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள் மிகக் கடுமையாக மாணவர்களிடம் பணம் பறித்து வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கு எதிராக புகார் கொடுக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதகம் வராமல் பார்த்துக் கொள்ளப்படும், கல்லூரி நிர்வாகங்களால் பழி வாங்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படுவர் என்று அரசு உத்தரவாதம் அளிக்கத் தயாரா.
அப்படி உத்தரவாதம் தந்தால், மீறி பாதிக்கப்படும் மாணவர்களுக்கு அரசு பொறியியல் கல்லூரிகளில் இடம் அளிக்கப்படும் என்று அரசு கூறினால், நான் இப்போதே ஆயிரக்கணக்கான மாணவர்களையும், பெற்றோர்களையும் புகார்களுடன் அணிவகுக்கச் செய்யத் தயார்.
1992ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (அதிக அளவிலான கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்வது) சட்டத்தில் அரசுக்கு வானளாவிய அதிகாரம் தரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தைக் கொண்டு தவறு செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் இந்த சட்டம் கையில் இருக்கும்போது அதை பயன்படுத்துவது குறித்து பொறுப்பற்ற முறையில் அரசு இருப்பதுதான் வியப்பாக உள்ளது.
இந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், நன்கொடைகள் வசூலிப்பதும், அதிக அளவிலான கட்டணங்களை வசூலிப்பதும் கணிசமாக குறையும், மாணவர்களுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். இந்த சட்டத்தை முதல்வர் கருணாநிதி பயன்படுத்துவார் என்று இப்போதும் நான் நம்புகிறேன் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications