அவதூறு பிரசாரத்தால் கலங்கவில்லை-பிரதீபா
புதுச்சேரி:எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறுப் பிரசாரங்களால் கலங்காமல், மக்களுக்காக உழைப்பதில் இப்போது போலவே எப்போதும் உறுதியாக இருப்பேன், கொண்ட கொள்கையிலிருந்து மாற மாட்டேன் என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திமுக மகளிர் பேரணியில் கலந்து கொண்டு தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய பிரதீபா பாட்டீல் இன்று புதுச்சேரிக்கு வந்தார்.
அங்கு புதுச்சேரி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கோரினார். பின்னர் அவர்களிடையே பிரதீபா பாட்டீல் பேசுகையில், எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதுகுறித்துக் கவலைப்படாமல் தொடர்ந்து இதே வேகத்தில் செயல்படுவேன்.
கொண்ட கொள்கையிலிருந்து மாற மாட்டேன். மக்களுக்காக உழைப்பதில் உறுதியாக இருப்பேன். கொள்கைப் பிடிப்புடனும், மனித நேயத்துடனும் நாட்டுக்காக உழைப்பேன்.
பொருளாதார வளர்ச்சியால், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பலனடைவர். ஏழை மக்கள் மட்டுமல்லாது, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பொருளாதார வளர்ச்சியால் பலனடைவர்.
நமது அரசியல் சட்டத்தின் அடிப்படையே, மதச்சார்பின்மைதான். அனைத்து மதத்தினருக்கும் சமூகத்தில் சம மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
சுதந்திரப் போராட்டத்தின்போது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், பிற தலைவர்களும் பட்ட கஷ்டங்கள், லட்சோப லட்சம் ஆண்களும், பெண்களும் அடைந்த துயரங்கள், நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.
இது எனக்காக நடக்கும் தேர்தல் அல்ல, இந்தத் தேர்தல் வெற்றி கோடிக்கணக்கான இந்தியர்களுக்குக் கிடைக்கப் போகும் வெற்றி என்றார் பிரதீபா பாட்டீல்.
புதுவை பயணத்தை முடித்துக் கொண்டு பின்னர் சென்னைக்கு வந்தார் பிரதீபா. அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் முதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சண்முகம், பாமக எம்.பி. ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் நாராயணசாமி, அமைச்சர்கள், புதுவை திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பிரதீபாவை வரவேற்றனர்.
பிரதீபாவின் வருகையையொட்டி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குவிந்தனர். ஆனால் அவர்கள் பிரதீபாவை சந்திக்க விடாமல் போலீஸாரால் தடுக்கப்பட்டனர். இதை எதிர்த்து செய்தியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து புகைப்படக்காரர்கள் மட்டும் பிரதீபாவை போட்டோ எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications