3வது அணிக்கு இதுதான் சரியான நேரம்: சிபிஎம்
ஹைதராபாத்:3வது அணியின் செயல்பாட்டுக்கான காலம் கனிந்து வந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளார்.
சமீபத்தில்தான் ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு, வைகோ உள்ளிட்டவர்களை உள்ளடக்கி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்ற மூன்றாவது அணி உருவானது.
இந்த அணிக்கு இடதுசாரிக் கட்சிகள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் கலாமுக்கு ஆதரவு கோரி இவர்களிடம் 3வது அணி தலைவர்கள் போய்க் கேட்டபோது கூட முடியவே முடியாது என்று கூறி அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி தலையெடுக்க தற்போது சரியான நேரம் வந்துள்ளதாக சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதவாத பாஜக ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தோம்.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக புதிய அணி உருவாக வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த இரு கூட்டணிகளையும் சாராத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஈடுபட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் விவசாய, தொழிலாளர்கள் கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான கட்சிளாக உருவாக்க முயற்சித்து வருகிறோம்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் எந்தவிதமான அரசியல் கூட்டணியும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றார் எச்சூரி.
எச்சூரி கூறுவதைப் பார்க்கும்போது இடதுசாரிகள், தனியாக ஒரு மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications