அதிமுகவுடன் சேர மாட்டோம்: ஜி.கே.மணி
வேலூர்: திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணையும் எண்ணம் பாமகவுக்கு இல்லை என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
திமுக, பாமக இடையிலான உரசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், சட்டசபைத் தேர்தலோடு, திமுகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. இப்போது பாமக எதிர்க்கட்சி, திமுக ஆளுங்கட்சி என்று கூறினார். இது திமுக, பாமக வட்டாரத்தில் பலவித எதிர்பார்ப்புகளையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வேலூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் ஜி.கே.மணி கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுமா, அதிமுக கூட்டணியில் இணையுமா என்று கேட்டனர். அதற்கு மணி, திமுக அரசை ஆதரிக்கிற முதல் கட்சியாக பாமக இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக கூட்டணியில் பாமக கண்டிப்பாக இணையாது. முடிந்து விட்ட விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை என்றார்.
டாஸ்மாக் மது விற்பனை நேரம் குறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, இன்னும் குறைக்க வேண்டும் என்றார் மணி.












Click it and Unblock the Notifications