ராமர் பாலத்தை இடித்தால் நாடு கொந்தளிக்கும்:இந்து முன்னணி எச்சரிக்கை
சென்னை:ராமர் பாலத்தை இடித்தால் நாடு கொந்தளிக்கும் என இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் பாலம் தொடர்பாக பொதுமக்கள், சுற்றுச்சூழலியலாளர்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையினர், புவியியல் நிபுணர்களின் ஆய்வுகள் ஆகியவற்றை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து அதை அமல்படுத்த வேண்டும். ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்.
சிறுபான்மையினர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில் பெரும்பான்மை இந்து சமூகத்தினரின் உணர்வுகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் செவிமடுக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
ராமர் பாலம் உடைக்கப்பட்டால் நாடு கொந்தளிக்கும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக ராமேஸ்வரம் ராமர் பால பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் ஜூலை 22ம் தேதி மதுரையில் கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் பிரவீண் டகோடியா, துறவிகள், இந்து சமயத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுதவிர அனைத்து அரசியல் கட்சியினரையும் கூட இக்கூட்டத்திற்கு அழைத்துள்ளோம் என்றார் இராம.கோபாலன்.












Click it and Unblock the Notifications