பாக். மசூதிக்குள் நுழைந்தது ராணுவம்:70 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் இன்று அதிகாலை ராணுவம் அதிரடியாக நுழைந்து தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தது. இதில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத் நகரின் மையப் பகுதியில் உள்ளது லால் மசூதி. பழமையான இந்த மசூதிக்கு அருகில்தான் ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவையும் உள்ளன.
இந்த மசூதியில் உள்ள மதரசாவில் பயின்று வரும் மாணவர்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுதது மசூதியில் உள்ள மாணவர்களுக்கு தீவிரவாதப் பயிற்சி கொடுக்கக் கூடாது என்று அதிபர் முஷாரப் எச்சரித்தார்.
ஆனால் இதை மசூதி நிர்வாகியும், மதகுருவுமான அப்துல் ரசீத் காஸி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இங்குள்ள மாணவர்களை கைது செய்து வெளியேற்ற முஷாரப் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மசூதியில் உள்ள மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். இதனால் பரபரப்பு எழுந்தது.
கடந்த 2ம் தேதி மசூதியைச் சுற்றிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. மசூதிக்கு செல்லும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்து விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவுக்குள் பிணைக் கைதிகளை விடுவித்து விட்டு அனைவரும் சரணடைய வேண்டும் என முஷாரப் கெடு விதித்திருந்தார். ஆனால் கெடு முடிந்த பின்னரும் கூட மசூதி நிர்வாகம் யாரையும் விடுவிக்கவில்லை.
இதையடுத்து இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தின் கமாண்டோ வீர்ரகள் தளபதி அர்ஷாத் தலைமையில் மசூதிக்குள் புகுந்து அதரடித் தாக்குதலைத் தொடங்கினர்.
அவர்களை எதிர்த்து மசூதிக்குள் இருந்த தீவிரவாதிகளும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதுவரை 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ராணுவத் தரப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் இஸ்லாமாபாத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
ஆபரேஷன் சைலன்ஸ் என பெயரிடப்பட்ட இந்த அதிரடி ராணுவ நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. மசூதி மற்றும் அதன் வளாகத்தில் உள்ள மதரசா கட்டடங்கள் முழுமையாக தாக்கித் தகர்க்கப்பட்டு விட்டன என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் மசூதிக்குள் இன்னும் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கியிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மதகுரு அப்துல் காஜி எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் பதுங்கு குழி வழியாக தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
மசூதி வளாகத்திற்குள் உள்ள அனைத்துத் தீவிரவாதிகளும் கொல்லப்படுவர். அப்புறம்தான் ராணுவ நடவடிக்கை ஓயும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
உதவ முன்வரும் அமெரிக்கா
இதற்கிடையே, பாகிஸ்தானை ஆக்கிரமித்து வரும் தீவிரவாதத்திலிருந்து அந்நாட்டை விடுவித்து உதவுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கோர்மக் கூறுகையில், தீவிரவாதத்தை எதிர்க்கும் அமெரிக்காவின் போரில் பாகிஸ்தான் உற்ற நண்பனாக விளங்குகிறது.
தற்போது பாகிஸ்தானிலேயே தீவிரவாதப் பிரச்சினை தலை தூக்கி உள்ளது. பாகிஸ்தான் மக்களைப் பாதிக்கும் பிரச்சினையாகும் இது. அதுமட்டுமல்லாது தெற்காசியப் பிராந்தியத்தையும், அமெரிக்காவையும் கூட இது பாதிக்கும்.
இந்தப் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications