நன்கொடையாளர்களுக்கு கிரீன் கார்டு:ஸ்ரீரங்கம் கோவில் திட்டம்
ஸ்ரீரங்கம்:ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு அதிக அளவில் நன்கொடை தருபவர்களுக்கு கிரீன் கார்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த கார்டு பெற்றவர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திராமல் நேராக உள்ளே சென்று சாமி கும்பிடலாம்.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் எம்.வெங்கட்ராமன் கூறுகையில், குறைந்தது ரூ. 1 லட்சம் நன்கொடை தருபவர்களுக்கு இந்த கிரீன் கார்டு வழங்கப்படும். இனிமேல் வழங்குபவர்களுக்கும், இதற்கு முன்பு கொடுத்தவர்களுக்கும் இது பொருந்தும்.
இந்த கார்டு பெறுபவர்கள் தரிசனத்திற்காக கோவிலுக்கு வரும்போது வரிசையில் காத்திராமல் நேரடியாக உள்ளே சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
விரைவில் பக்தர்களின் வசதிக்காக இ-டிக்கெட்டிங் முறை அமல்படுத்தப்படவுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் கோவில் அறங்காவலர் வாரியம் சார்பில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். ஸ்ரீரங்கத்தில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கல்லூரி வளாகம் அமையும்.
இந்தக் கல்லூரிகளில் கோவில் ஊழியர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பக்தர்களிடமிருந்து நன்கொடை பெற்றும், கோவில் நிதியிலிருந்தும் இந்தக் கல்லூரிகள் கட்டப்படும்.
இதுதவிர மன நலம் பாதித்த குழந்தைகள் நலனுக்காக விடுதியுடன் கூடிய பள்ளிக்கூடமும் அமைக்கப்படவுள்ளது என்றார் வெங்கட்ராமன்.












Click it and Unblock the Notifications