திமுகவுக்கு தான் தொண்டர்களை மதிக்க தெரியும்: ஸ்டாலின்
திண்டுக்கல்ஒரு தொண்டனை மதிப்பதில் எங்களுக்கு நிகர் யாரும் கிடையாது என தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களை பாராட்டும் வகையில் பண முடிப்பு தரும் விழா நடைபெற்றது. இதில் ஸ்டாலின் பேசியதாவது,
கலைஞரின் 84-வது பிறந்த நாளையொட்டியும், சட்டமன்றத்தில் கலைஞரின் 50 ஆண்டு சேவை புரிந்ததையும் கொண்டாடும் வகையில் மூத்த உறுப்பினர்களை பாராட்ட இந்த விழா நடக்கிறது.
சமீபத்தில் கோவைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த போது, பொங்கலூர் பழனிச்சாமி 1 மணி நேரம் எனக்காக ஒதுக்குங்கள் எனக் கேட்டுக் கொண்டார். பின்பு அவர் சொன்ன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றால் அங்கு என்னுடைய பிறந்த நாளையொட்டி கட்சியில் பணியாற்றிய மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் மூலம் அவர்களுக்கு பண முடிப்பும் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி குறித்து பேராசிரியர் அன்பழகன் அவர்களிடமும், ஆற்காட்டாரிடமும் பேசினேன். அவர்கள் இதே போன்ற பண முடிப்பு தரும் நிகழ்ச்சியை அனைத்து மாவட்டத்திலும் நடத்தலாம் என்று அனுமதி தந்தனர்.
ஏற்கனவே 10 மாவட்டங்களில் இந்த விழாக்கள் நடத்தப்பட்டு இப்போது திண்டுக்கல்லில் நடக்கும் இந்த விழா 11-வது விழாவாகும். இந்த விழாவின் மூலம் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 840 பேருக்கு பொற்கிழி, பாராட்டுச் சான்றிதழும், பண முடிப்பும் தரப்படுகிறது.
பழமையான தொண்டர்களை கெளரவபடுத்துவதோடு மட்டுமல்லாது, அனைத்து தொண்டர்களையும் அரவணைத்து செல்லவும், மதிக்கவும் தெரிந்த ஒரே கட்சி திமுக தான் என்றார்.












Click it and Unblock the Notifications