சிவாஜி பட துணை நடிகை பெங்களூரில் கொலை!
பெங்களூர்:சிவாஜி படத்தில் நடித்த பெங்களூரைச் சேர்ந்த துணை நடிகை படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் பத்மா (33). இவர் ஒரு துணை நடிகை. கன்னடம், தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். சிவாஜி படத்திலும் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பெங்களூர் பேட்டநாராயணபுரா பகுதியில் பந்தர்பாளையா என்ற இடத்தில் ஒரு பாழடைந்த கட்டடத்தில் பத்மாவின் பிணம் கிடந்தது. அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
எங்கோ கொலை செய்து விட்டு உடலை இங்கு கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவரது கணவர் முத்தப்பா ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில்தான் பத்மாவின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னடப் படம் ஒன்றின் ஷூட்டிங்குக்காக போன பத்மா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிவாஜி படத்துடன் தொடர்புடைய துணை நடிகர் ஒருவர் சமீபத்தில் சென்னையில் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். சிவாஜி பட ஒலிப்பதிவாளர் ஒருவர் இயக்குநர் ஷங்கர் கொடுத்த விருந்தில் அதிகம் குடித்து விட்டு நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் பத்மா மர்மமான முறையில் இறந்துள்ளார்.












Click it and Unblock the Notifications