கருணாநிதியை நினைத்தால் ஜெயலலிதாவுக்குநெஞ்சை அடைக்கும் வேதனை!
சென்னை:எப்படி இருந்த தமிழகம், எப்பேர்ப்பட்ட தலைவர்களை பெற்ற தமிழகம் இப்போது கருணாநிதி ஆட்சியில் இந்த இழிநிலைக்கு ஆளாகிவிட்டதே என நினைத்தால் வேதனை நெஞ்சை அடைக்கிறது என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றம், 16 வருடம் காத்திருந்த பின்பு கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில் தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய அம்சங்களும், ஏற்றுக் கொள்ளாத அம்சங்களும் இருந்தன.
ஏற்றுக் கொள்ளக்கூடிய அம்சங்களை பொறுத்த வரையில் உடனடியாக அந்த தீர்ப்பினை செயல்படுத்த வேண்டும் எனவும், பாதக அம்சங்கள் குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும் எனவும், நடுவர் நீதிமன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை நியமிப்பது குறித்தும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி நானே உண்ணாவிரதம் இருந்தேன்.
அப்போது கருணாநிதி லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஒரு விளம்பரம் வெளியிட்டார். அதில் தீர்ப்பு வந்த 90 நாட்கள் கழித்து தான் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியும் என சட்டம் உள்ளது என கூறி, சில வழக்கறிஞர்கள் பெயர் விளம்பரப்படுத்தப்பட்டது. அது பொய் என நான் கூறினேன்.
மறு ஆய்வு மனு தாக்கல் செய்துவிட்டு தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என்கிற முறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்திலிருந்து ஒதுங்கியிருந்த அதிமுக, உச்சநீதிமன்றத்தை மட்டுமே அணுக வேண்டும் என தெளிவாகக் கூறியது.
காவிரி நடுவர் மன்றம் கடந்த 10ம் தேதி தமிழக அரசின் மனுவை விசாரிக்க முடியாது என தெளிவாகத் தெரிவித்தது.
கர்நாடகம் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், தமிழகம் காவிரி நடுவர் மன்றம் செல்ல கூடாது என நான் கூறியது இன்று நடந்துவிட்டது. கோடிகணக்கான பணத்தையும், காலத்தையும் செலவழித்துவிட்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்துள்ளது தமிழக அரசு.
பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் விழுந்து மறுபடியும் தாயம் ஒன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு தமிழகத்தை கருணாநிதி வேண்மென்றே தள்ளிவிட்டுள்ளார். இதுதான் அவருடைய நிர்வாகத் திறன், இமாலய சாதனை.
தஞ்சை மண்ணிலே பிறந்து காவிரி தண்ணீரில் உயிர் வாழ்ந்தும் கூட அதை பற்றி அக்கரை இல்லாத ஒரே மனிதர் கருணாநிதி மட்டும்தான்.
இதற்கிடையில் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தில் ரகசியமாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த நகலை கேட்டு பெற கூட தமிழகம் தயாராக இல்லை.
மத்திய அரசு கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு தீர்ப்பினை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு குறித்து விளக்கம் கோருகிறோம் என்ற போர்வையில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இதனால் அதிக தாமதம் ஏற்படும்.
எனவே காவிரி நதி நீர் பங்கீடு என்பது கருணாநிதி ஆட்சியில் நடக்காது. இவற்றிற்காக போராடி தமிழக நலனை காக்கும் அளவில் அவருடை குடும்ப சூழ்நிலையோ, செயல் திறமையோ அல்லது மனப்பக்குவமோ அவருக்கு கிடையாது.
வருடந்தோறும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். குறுவை சாகுபடி முடிந்துவிட்டது. தற்போது இன்னும் திறக்கப்படவில்லை. மேட்டூரில் 88 அடி தண்ணீர் இருந்தும் 25ம் தேதி திறக்கப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டங்களிலும், பல்வேறு அறிக்கைகளிலும், எந்த அளவிற்கு காவிரி நதி நீர் பங்கீடு குறித்து சொல்லியிருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது யோசித்து இருக்க வேண்டும். காலதாமதம் இன்றி உச்சநீதிமன்றத்திற்கு உடனே செல்ல வேண்டிய வேலைகளை செய்திருக்க வேண்டும்.
கருணாநிதியின் தலைமையிலான அணிக்கு தமிழக மக்கள் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை அளித்துள்ளனர். மாநில அரசிலும், மத்திய அரசிலும் கருணாநிதி கொடூரங்கள் நீண்டுள்ளது. இத்தனை அதிகாரங்களை வைத்துக் கொண்டு ஒரு சிறு நன்மையை கூட தமிழகத்திற்கு செய்ய தயாராக இல்லை கருணாநிதி.
எப்படி இருந்த தமிழகம், எப்பேர்ப்பட்ட தலைவர்களை பெற்ற தமிழகம் இந்த இழிநிலைக்கு ஆளாகிவிட்டதே என நினைத்தால் வேதனை நெஞ்சை அடைக்கிறது.
எல்லா பதவியும் கருணாநிதியிடம் இருந்தும், தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜமும் இல்லை. இப்படியும் ஒரு முதலைமைச்சர், இப்படியும் ஒரு தமிழக அமைச்சரவை, மத்திய அமைச்சர்கள். இவையெல்லாம் தமிழகத்திற்கு வாய்த்த பெரும் சாபகேடு. தமிழ் மக்கள் எவ்வளவு சீக்கிரம் இந்த சாபகேட்டிலிருந்து விலகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரம் தமிழகத்திற்கு நல்லது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
டெல்லி சென்றார்:
இந் நிலையில் ஜெயலலிதா இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நாளை பிற்பகல் டெல்லியில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடக்கிறது (யாருக்கு ஓட்டு என இந்தக் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை)
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிட மறுத்துவிட்டதால் ஷெகாவத்திற்கு ஆதரவளிக்குமாறு 3வது அணியினரிடம் பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக ஜெயலலிதா, வைகோவை ஜஸ்வந்த் சந்தித்து விட்டுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications