குண்டு மிரட்டல்: திருப்பதி, காளஹஸ்திகோவில்களுக்கு தீவிர பாதுகாப்பு
திருப்பதி:சித்தூர் மாவட்டத்தில் கோயில்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து திருப்பதி, திருச்சானூர் உள்ளிட்ட கோவிலிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மிரட்டல் வந்தது.
திருப்பதி பேஸ் கேம்ப்பில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தான்.
இதையடுத்து மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு போலீஸாரும் குவிக்கப்பட்டனர். ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலவதி கோவில் உள்பட சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களுக்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளதீஸ்வரர் கோவில் மற்றும் கனிப்பாகத்திலிருக்கும் வரசித்தி விநாயகர் கோவில் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications