சோனியாவை பிரதீபா பிரதமராக்குவார்-சோ:மனசாட்சிப்படி வாக்கு-ஜெவுக்கு செளரி கோரிக்கை
சென்னை:குடியரசுத் தேர்தலில் ஜெயலலிதாவை உள்ளடக்கிய ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என பாஜக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பத்திரிக்கையாளருமான அருண் செளரி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த இந்திய விடுதலை அணியின் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கண்டிப்பாக மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது. நாடு நெருக்கடியில் இருக்கும்போது பிரதமருக்கு ஆலோசனை கூறுபவராக இருக்க வேண்டும்.
1962-ல் சீனப்படை படையெடுப்பினால் நொடிந்துபோய் இருந்த அப்போதைய பிரதமர் நேருவுக்கு மனரீதியான தைரியத்தை கொடுத்து நெருக்கடியிலிருந்து அவரை மீள்வதற்கு இருந்தவர் அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன்.
ஆனால் இப்போது பிரதிபா பாட்டீலை ஆதரிக்கும் மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுத்த திமுக போன்ற கட்சிகள் இதன் விளைவை இனிமேல் தான் சந்திக்கும். பாஜக ஆட்சியில் நேர்மை, தூய்மை, கண்ணியம் இருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாகவே பாஜக அப்போது எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைப் பெற்றே அரசியல் சாராத ஒரு நேர்மையானவரான அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக நிறுத்தியது.
ஆனால் இப்போதுள்ள காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் பிரதிபா பாட்டீலை தேர்வு செய்துவிட்டு அவரையே ஒரு மனதாகவும் தேர்வு செய்யவேண்டும் என வலியுறுத்துவது எந்த விதத்தில் சரி.
காங்கிரஸ் தலைவர் சோனியாவே ஒரு புதிர். அவர் தேர்வு செய்துள்ள பிரதிபா பாட்டீல் இன்னொரு புதிர். ஆனால் பிரதிபா பாட்டீல் மீது ஏகப்பட்ட மோசடி புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து, அவர்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் மீதுள்ள குறைகளை மறைக்க பிரதமர் உட்பட அனைவரும் முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் மோசமான செயல்.
இந்நிலையில் சரியான வேட்பாளரை தேர்வு செய்ய 3வது அணியான ஜெயலலிதா அங்கம் வகித்துள்ள ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கண்டிப்பாக குடியரசுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார் அருண் செளரி.
சோ பேச்சு:
இக் கூட்டத்தில் பேசிய துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி,
பிரதிபா குடியரசுத் தலைவரானால் தற்போது உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜிநாமா செய்ய வைத்து, எம்.பி.க்கள் ஒரு மனதாக சோனியாவை தேர்ந்தெடுப்பதாகக் கூறி அவருக்கு பிரதிபா மகுடம் சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பொது வாழ்க்கைக்கு வருவோர் தரம் தாழ்ந்து இருப்பதை ஏற்றுக் கொள்ள நாம் பழகி கொண்டோம். அதன் விளைவுதான் பிரதிபா பாட்டீல் தேர்வு என்றார்.












Click it and Unblock the Notifications