ஜனாதிபதி தேர்தல்: புறக்கணிக்கிறது 3வது அணிது.ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் புறக்கணிப்பது என டெல்லியில் கூடிய 3வது அணிக் கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத் தகவலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஜெயலலிதா, முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு ஆகியோரை உள்ளடக்கிய ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்தது. ஆனால், அதற்கு முன் அவரது அனுமதியை இந்தக் கூட்டணி பெறவே இல்லை.
இதைத் தொடர்ந்து கலாமை நேரில் சந்தித்து அவர் சொன்னதாக மீடியாக்களுக்கு சில தகவல்களைச் சொல்லி குழப்பம் உண்டாக்கப்பட்டது. இந்த அரசியல் சண்டையில் தனது பெயர் டேமேஜ் ஆவதை உணர்ந்த கலாம் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.
இதனையடுத்து ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளராக பாத்திமா பீவி உள்ளிட்ட சிலரது பெயர்களை பரிசீலித்தது. ஆனால், கூட்டணியில் ஒற்றுமை இல்லாததால் யாரது பெயரும் இறுதியாகவில்லை.
இதனால் தேர்தலையே புறக்கணிப்பதா அல்லது பாஜக ஆதரவோடு போட்டியிடும் ஷெகாவத்தை ஆதரிப்பதா என்ற குழப்பமான நிலையில் அக் கூட்டணி உள்ளது.
இந் நிலையில் பாஜக கூட்டணித் தலைவர்கள் மூன்றாவது அணியினரை சந்தித்து ஷெகாவத்து ஆதரவு கோரி வந்தனர்.
இந்த பின்னணியில் தான் இன்று டெல்லியில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் வீட்டில் 3வது அணியினர் இன்று கூடினர்.
இதற்காக ஜெயலலிதா நேற்றே டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார். சுமார் 3 மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் பிரதீபா பாட்டீல், ஷெகாவத் இருவரையும் ஆதரிப்பதில்லை என்றும், ஜனாதிபதி தேர்தலையே புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
நாங்கள் காங்கிகஸ், பாஜக ஆகிய கட்சிகளிடம் இருந்து சம தூரத்தில் விலகி இருக்க முடிவு செய்துள்ளோம். இதனால் ஜனாதிபதி தேர்திலில் இந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரிக்கப் போவதில்லை. தேர்தலை எங்கள் கூட்டணி புறக்கணிக்கும். அதே நேரத்தில் துணை ஜனாதிபதி தேர்தலில் எங்கள் அணியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம்.
காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றால், துணை ஜனாதிபதி தேர்தலில் கம்யூனிஸ்டுகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம்.
துணை ஜனாதிபதி தேர்தலில் எங்கள் வேட்பாளருக்கு யாருடைய ஆதரவும் கேட்கப் போவதில்லை. நாங்கள் வெல்ல முடியாது என்பது தெரியும். ஆனாலும் எங்கள் அடையாளத்தை நிலை நிறுத்த வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என்றார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில்,
துணை ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார்.
முன்னதாக துணை ஜனாதிபதி தேர்தலுக்கு இடதுசாரி வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தினால் அவரை 3வது அணி ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இக் கூட்டணியில் புதிய வரவாக பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications