டாக்டர் ஹனீப் மீது ஆஸி.போலீஸ் திடீர் வழக்குப் பதிவு
மெல்போர்ன்:இங்கிலாந்துத் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப்புக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கூறி வந்த ஆஸ்திரேலிய போலீஸார் திடீரென அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லண்டனில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் டாக்டராகப் பணியாற்றி வரும் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப்பை பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்தனர்.
கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்புடன் சென்று மோதிய கபீல் அகமதுவின் உறவினர் என்பதால் ஹனீப்புக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் எனக் கருதி ஹனீப் கைது செய்யப்பட்டார்.
![]() |
கடந்த 12 நாட்களாக அவரிடம் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அவருக்கு எதிராக ஆதாரம் எதுவும் கிடைக்காததால், வழக்கு எதையும் பதிவு செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய போலீஸ் திணறி வந்தது.
இதையடுத்து அவரது காவல் நீட்டிப்பு முடிவை ஆஸ்திரேலிய போலீஸார் கைவிட்டனர். இதைத் தொடர்ந்து ஹனீப் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் பெரும் திருப்பமாக தற்போது ஹனீப் மீது இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு உதவியதாக ஹனீப் மீது திடீரென ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் முக்கிய தொடர்புடையதாக ஹனீப் மீது குற்றம் சாட்டப்படவில்லை. மாறாக, தாக்குதல் நடத்தியவர்களுக்கு சிம் கார்டு கொடுத்து உதவியதாக ஹனீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நோக்கத்துடன் சிம் கார்டை ஹனீப் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறை ஆணையர் மைக் கீட்லி கூறியுள்ளார்.
இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 2வது நபர் ஹனீப். முதலில் ஈராக்கைச் சேர்ந்த பிலால் அப்துல்லா மீது இங்கிலாந்து போலீஸார் குற்றச்சாட்டுப் பதிவு செய்திருந்தனர்.
ஹனீப் மீதான வழக்கு குறித்து ஆஸ்திரேலிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 1995ம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் 102.7(2) பிரிவின் கீழ், தீவிரவாதிகளுக்கு உதவியதாக ஹனீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் ஹனீப்பை பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். ஹனீப்பை இங்கிலாந்துக்கு கொண்டு செல்லாமல் ஆஸ்திரேலியாவிலேயே வைத்து விசாரணை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஹனீப்பின் வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோ கூறுகையில், ஆஸ்திரேலிய நாட்டுச் சட்டத்தின் கீழ்தான் ஹனீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி அவர் ஆஸ்திரேலியாவில் வைத்துத்தான் விசாரிக்கப்படுவார் என்றார்.
இந்த திடீர் வழக்கின் மூலம் ஹனீப் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தகர்ந்துள்ளது. இதனால், ஹனீப்பின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
.jpg)












Click it and Unblock the Notifications