பின்லேடன் தலைக்கு விலை அதிகரிப்புபிடிக்க உதவினால் ரூ. 200 கோடி பரிசு
வாஷிங்டன்:அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் தலைக்கு அமெரிக்கா வைத்துள்ள விலையை 50 மில்லியன் டாலராக உயர்த்தி அமெரிக்க செனட் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. லேடனைப் பிடிக்கும் நடவடிக்கையை முடுக்கி விடுமாறும் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செனட் சபை கோரிக்கை வைத்துள்ளது.
அமெரிக்காவின் மிக முக்கிய எதிரிகளில் ஒருவர் பின் லேடன். ஆரம்பத்தில் பின் லேடனை ஊக்குவித்து, ரஷ்யாவுக்கு எதிராக, தலிபான் அமைப்பை பின் லேடன் மூலம்தான் அமெரிக்கா வளர்த்து விட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்த ரஷ்ய படைகளுக்கு எதிராக தலிபான் அமைப்பினருக்கு லேடன் மூலம் ஆயுத உதவிகளையும் அளித்தது.
ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்தார் பின் லேடன். எந்த அமெரிக்காவால் வளர்ந்தாரோ அதே அமெரிக்காவில், நியூயார்க் நகரில் இரட்டை கோபுர வர்த்தக மையத்தை அதிரடியாக தாக்கி அழித்தது பின் லேடனின் அல் கொய்தா அமைப்பு.
இதையடுத்து லேடனை வேட்டையாடும் நடவடிக்கையில் குதித்தது அமெரிக்கா. ஆனால் இன்று வரை பின் லேடனின் நிழலைக் கூட தொட முடியாமல் திணறி வருகிறது அமெரிக்கா. பின்லேடன் உயிருடன் இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்பதே தெரியாத நிலையில் அவரது தலைக்கு விலையும் வைத்தது அமெரிக்கா.
![]() |
இந்த நிலையில் பின் லேடன் தலைக்கு வைத்த விலையை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா. அவரைப் பிடித்துக் கொடுத்தால் இந்திய மதிப்பில் ரூ. 200 கோடி பரிசளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு 87 ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் மூலம் பின் லேடனை உயிருடன் பிடிக்கவோ அல்லது பிணமாக மீட்கவோ அமெரிக்காவுக்கு ஆக்கப்பூர்வமான தகவல் தருவோருக்கு ரூ. 200 கோடி பரிசு அளிக்கப்படும்.
இந்தத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது புஷ் மீது சரமாரியாக குற்றம் சாட்டி உறுப்பினர்கள் பேசினர். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈராக்கில் மட்டும் ஜார்ஜ் புஷ் தீவிர கவனம் செலுத்தி வருவது தவறு. ஈராக்கும், செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் நடந்த தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் ஈராக் மீது அமெரிக்க அதிபர் தீவிர கவனம் செலுத்தி வருவது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் வாதிட்டனர்.
இதன் மூலம் பின் லேடனைப் பிடிக்கும் முயற்சிகளில் ஜார்ஜ் புஷ் தோல்வி அடைந்து விட்டார், தொய்வடைந்து விட்டார் என்றும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
கடந்த 2003ம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்க ஆதரவுப் படைகள் ஊடுறுவதற்கு முன்பு, லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று முழங்கி வந்தார் புஷ். ஆனால் சதாம் உசேனைக் குறி வைத்து அவர் களம் இறங்கிய பின்னர் லேடனை கிட்டத்தட்ட மறந்து விட்டார்.
ஒரு கட்டத்தில் பின் லேடன் குறித்து நான் கவலைப்படவில்லை என்றும் கூறினார் புஷ். அவர் இருக்கிறாரா, இல்லையா என்பது கூட தெரியவில்லை என்றும் சொன்னார்.
இந்த நிலையில் பின் லேடனின் தலைக்கு வைத்த விலையை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவுக்கான தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான உளவுத் தகவல்கள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்காக இதுவரை அமெரிக்க அரசு 32 மில்லியன் டாலர் பணத்தை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications