பி.இ: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகள்அங்கீகாரம் ரத்து- பொன்முடி எச்சரிக்கை
சென்னை:
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு, உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பாக உள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லாது என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு குறித்து அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவிக்கையில், சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர் சேர்க்கையில் மாணவர்களின் தகுதி கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
மாணவ சமுதாயத்தின் நலன் கருதியும், தவறுகள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும், மையப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு முரணாக உள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம். சட்ட நிபுணர்களுடன் உரிய முறையில் விரிவாக ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்நாடு தொழிற் கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டது.
அரசுக் கோட்டாவுக்கு மாணவர் இடங்களை ஒதுக்க 110 சிறுபான்மை அல்லாத மற்றும் 62 சிறுபான்மை கல்லூரிகள் ஒப்புக் கொண்டுள்ளன. எனவே அரசின் சட்டத்திற்கு சுய நிதிக் கல்லூரிகள் முழு அளவில் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூற முடியாது என்றார்.
கூடுதல் கட்டணம் வசூலிப்போருக்கு எச்சரிக்கை:
அரசு நிர்ணயித்துள்ள கட்டண தொகையை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்வதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் அரசு பரிந்துரை செய்யும்.
நன்கொடை வாங்கும் கல்லூரிகள் மீது புகார்கள் கொடுக்க மாணவர்கள் முன் வர வேண்டும். அவ்வாறு புகார் கூறும் மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்படும் என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications