மாணவிகளிடம் அநாகரீக பேச்சுபெற்றோர் போராட்டம்-ஆசிரியை டிஸ்மிஸ்
சென்னை:நோட்டுப் புத்தகத்தில் அட்டை போட்டு வராததற்காக, மாணவர்களின் முன்னிலையில் மாணவிகளின் சட்டையைக் கழற்றுமாறு அநாகரீகமாக ஆசிரியை கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அந்த ஆசிரியை பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் மம்தா, மோனிகா ஆகிய இரு மாணவிகளும் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று மாலை பள்ளிக்கூடம் முடியும் நேரத்தில், அந்த இரு மாணவிகளையும் அழைத்த வகுப்பு ஆசிரியை ஜெயந்தி, நோட்டுப் புத்தகத்தில் அட்டை போட்டு விட்டீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு இருவரும் இன்னும் போடவில்லை என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு கோபமடைந்த ஆசிரியை ஜெயந்தி, சட்டை போடத் தெரிகிறது, நோட்டுக்கு அட்டை போடத் தெரியவில்லையா, இருவரும் சட்டையைக் கழற்றுங்கள், அப்போதுதான் அறிவு வரும் என்று கூறி இரு மாணவிகளையும் மாணவர்கள் முன்னிலையில் சட்டையைக் கழற்றுமாறு கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இரு மாணவிகளும் அழுதுள்ளனர். பின்னர் அவமான உணர்வுடன் வீடு திரும்பியுள்ளனர். அங்கு அழுதபடி தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியையின் பேச்சு குறித்துக் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் குதித்தனர். பள்ளியின் முதல்வர் ராஜசேகரனிடம் ஆசிரியை குறித்து புகார் கூறினார்.
இதையடுத்து அவர்களிடம் ராஜசேகரன் மன்னிப்பு கேட்டார். பின்னர் ஆசிரியை ஜெயந்தியும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் அவர்கள் சமாதானமடைவது போலத் தெரியவில்லை.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். பள்ளி நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியருடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை ஜெயந்தியை டிஸ்மிஸ் செய்து விட்டோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்தே அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications