தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ்கருணாநிதி சலுகை மழை
சென்னை: அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்தியாவிலிலேயே முதன்முதலாக தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க வெள்ளிவிழா மாநாடு நிறைவு விழா சென்னையில் நடந்தது. இதில் கருணாநிதி பேசுகையில்,
அரசு ஊழியர்களுக்கு என்ன அள்ளி அள்ளி கொடுத்தாலும், சலுகைகள் வாரி வாரி வழங்கினாலும் அவர்கள் கஷ்டங்கள் தீராது. அவர்களின் துன்பம் அறவே அற்று போகாது. அரசு ஊழியர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை எந்த அரசானாலும் செய்து தான் தீர வேண்டும். அதை நீங்கள் போராடிதான் பெற வேண்டும்.
போராடிப் பெற வேண்டிய உரிமைகளை போராடிதான் பெறவேண்டும் என்ற அறிவுரையை தான் உங்களுக்கு சொல்வேன். ஆட்சி பொறுப்பிலுள்ளவர்கள் அரசு ஊழியர்களை பார்த்து போராட வேண்டும் என கூறினால் எவ்வாறு ஆட்சி நடத்த முடியும் என சிலர் கேட்க கூடும்.
எப்போதும் போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது. போர்க் குணம் இருந்ததால் தான் கடந்த 5 ஆண்டு காலத்தில் அரசு பணியாளர் சங்கம் அக்கிரமத்திற்கு, அநியாயத்திற்கு அடிபணியாத சங்கமாக இருக்க முடிந்தது. இழந்த சலுகைகளை பெறவதற்கு ஏற்ற ஆட்சியை நீங்கள் அமைத்துக் கொடுத்தீர்கள்.
அரசு ஊழியர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என தொல்.திருமாவளவன் கூறினார். நான்தான் அவர்கள் பக்கம் இருக்கிறேன். கடைசி வரை அவர்கள் பக்கம் தான் இருப்பேன். இதில் சந்தேகம் வேண்டாம். உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
நீங்கள் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை கொடுத்துள்ளீர்கள். அனைத்துக்கும் விளக்கம் அளிக்க நேரம் இல்லை. ஆனால் அவை நிராகரிக்கப்பட வேண்டியவை அல்ல. அதிகாரிகளுடன் கலந்து பேசி நிறைவேற்றக் கூடியவை. கோரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் திமுக வழங்கிய சலுகைகளை வழங்க வேண்டும் என ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை நசுக்க வேண்டும் என அதிமுக அரசு தலைமை செயலகத்தில் 10,000க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை நியமித்தது. அவர்களை கடந்த கால ஆட்சியிலேயே திடீரென பணி நீக்கம் செய்ய முற்பட்டபோது அவர்களுக்காக நான் குரல் கொடுத்தேன்.
தற்காலிகமாக நியமிக்கப்பட்ட மொத்தம் 11,356 பேர் தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும் பணிபுரிபவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது இவர்களை எல்லாம் டி.என்.பி.எஸ்.சி. மூலம் சிறப்பு தேர்வு நடத்தி தமிழ்நாடு அமைச்சு பணி, நிதித்துறை அமைச்சு பணிகளில் இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்து கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றம் அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. காலியிடங்களை கணக்கில் கொண்டு இவர்களுக்கு படிப்படியாக பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து முக்கியமான இன்சூரன்ஸ் திட்டம். தற்போது தனியார் மருத்துவமனைகளில் அரசு அலுவலர்கள் சிகிச்சை பெறும்போது அதிகம் செலவிட வேண்டியுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து நவீன வசதியுடைய மருத்துவமனைகளில் பல முக்கிய நோய்களுக்கு மருந்தளிக்கும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்படும்.
இதுவரை இந்தியாவில் எந்த மாநில அரசும் காப்பீட்டு திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு தொடங்கவில்லை, முதன்முதலாக தமிழகத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் அரசு அலுவலர்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். ரூ.2 லட்சம் வரை அவர்கள் மருத்துவமனைக்கு எந்த தொகையும் செலுத்த தேவையில்லை. இந்த தொகையை எட்டும் வரை அந்த நோயாளிகள் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் எந்த பணமும் செலுத்த அவசியமில்லை. அரசு மற்றும் அலுவலர் பங்கேற்புடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அலுவலர் சிறிய தொகையை சந்தாவாக செலுத்த வேண்டும். அரசு ஏற்கும் ஒரு குறிப்பிட்ட சிறப்புத் தொகை ஆகியவற்றுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு அலுவலர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.2 லட்சம் பெறலாம். இது ஒரு புதுமையான திட்டம். ரூ.2 லட்சம் முதலில் கொடுப்பது மட்டுமல்லாமல் அதே அலுவலருக்கு 4 ஆண்டுகளுக்கு பின் நோய்வாய்ப்பட்டால் ரூ.2 லட்சம் வரை நிதியுதவி பெறலாம். இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
சங்கத்திரறகு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளீர்கள். நீண்ட காலமாக அனைத்து சங்கங்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அரசு ஊழியர் சங்கங்களுக்கு அரசு அங்கீகாரம் அளிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் பணி முடிந்ததும், அங்கீகாரம் பற்றிய அறிவிக்கப்படும். அதற்கு பாராட்டு கூட்டம் நடத்த இப்போதே மண்டபத்திற்கு முன் பணம் கொடுத்து வையுங்கள். இந்த 3 கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.
அரசு ஊழியர்கள் பொறுப்போடும், அக்கறையோடும் பணியாற்றினால் எந்த அரசும் நிம்மதியாக அரசாள முடியும். கடந்த ஆட்சியில் அதை உணராமல் 90 சதவீத வருமானம் அரசு ஊழியர்களுக்கு வாரி இறைப்பதாக கூறினார்கள். அதை மறுத்து வருவாயில் எவ்வளவு தொகை அரசு ஊழியர்களுக்கு செலவு அளிக்கப்படுகிறது என விளக்கம் தந்த அணி தான் இந்த மேடையிலுள்ளது.
நாங்கள் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம். நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த கொள்கை கொண்டிருந்தாலும் அரசு பணியாளர்களாக இருக்கும்போது அரசின் அங்கங்களாகவே கருதப்படுவீர்கள். என்றென்றும் உங்களுக்காக உழைப்போம் என உறுதிபட சொல்லிக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications