விசாரணை முடிந்ததும் ஹனீப் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்-ஆஸி. அமைச்சர்
மெல்போர்ன்:சட்டப்பூர்வ நடவடிக்கைகள், விசாரணைகள் முடிந்த பின்னர் டாக்டர் முகம்மது ஹனீப், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட டாக்டர் முகம்மது ஹனீப்புக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், 13 நாட்களாக காவலில் வைத்திருந்த ஆஸ்திரேலிய போலீஸார், திடீரென தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு கொடுத்தார் என்று கூறி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு பிரிஸ்பேன் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரங்களிலேயே ஹனீப்பின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு. இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பிரிஸ்பேனில் உள்ள வில்லாவுட் குடியேற்ற முகாமில் அடைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவில் மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவிலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஹனீப் விஷயத்தில் ஆஸ்திரேலிய அரசும், காவல்துறையும் பாரபட்சமாக நடப்பதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த நிலையில், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்குப் பின்னர் ஹனீப் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஹனீப் மீதான குடியேற்றத் துறை விசாரணை முடியும் வரை அவர் குடியேற்றத் துறை முகாமில் அடைக்கப்பட்டிருப்பார். அவர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்.
ஆஸ்திரேலிய காவல்துறை ஹனீப் மீதான குற்ற ஆவணத்தை விரைவில் தாக்கல் செய்யும். அதன் பின்னர் ஹனீப் மீது புதிதாக புகார்கள் ஏதும் இல்லாவிட்டால், அவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார்.
தவறான தகவலின் அடிப்படையில் ஹனீப் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஹனீப்பின் வழக்கறிஞரிடம் விரிவாக விளக்கப்படும்.
இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு ஹனீப் தரப்பு கோரலாம். இது நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. இதை ரத்து செய்யுமாறு இந்திய அரசும் கோர முடியும். நீதிமன்றத்தையும் ஹனீப் தரப்பு அணுக முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications