தேர்தல் புறக்கணிப்பு: 3 வது அணிக்கு எதிராகதேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்
டெல்லி:ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற மூன்றாவது அணியின் முடிவு அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
தேர்தலை புறக்கணிக்குமாறு எம்பி, எம்எல்ஏக்களுக்கு தடை விதிக்க எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை என்றும், இது தொடர்பாக மூன்றாவது அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அத்வானி தலைமையில் பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் நேரில் புகார் கொடுத்தனர்.
பாஜகவின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் (19ம் தேதி)நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஜெயலலிதாவை உள்ளடக்கிய மூன்றாவது அணி புறக்கணிக்கிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீலின் வெற்றி உறுதியாகிவிட்டது.
அதே நேரத்தில் மூன்றாவது அணியை நம்பி தனது வேட்பாளராக பைரோன்சிங் ஷெகாவத்தை சுயேச்சையாக களமிறக்கிய பாஜக இப்போது அல்லாடி வருகிறது. ஷெகாவத் தோல்வி அடைவது உறுதி என்ற நிலையில் அதை வைத்து ஏதாவது ஒரு அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
![]() |
இதனால் மூன்றாவது அணியின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி அத்வானி தலைமையில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அத்வானியுடன் அருண் ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி, விஜய்குமார் மல்ஹோத்ரா, அலுவாலியா மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரும், ஐக்கிய ஜனதா தளத்தின் திக்விஜய் சிங், கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோரும் தேர்தல் ஆணையத்துக்குச் சென்று புகார் தந்தனர்.
தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை சந்தித்து அவர்கள் அளித்த மனுவில்,
ஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சி எடுக்கும் முடிவு, அல்லது பிறப்பிக்கும் உத்தரவை மீறும் அதிகாரம், எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு இருக்கிறதா என தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
மேலும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு அரசியல் கட்சிகள் உத்தரவிடுவதற்கு அரசியல் சட்டத்தில் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
கட்சிகள் எடுக்கும் தேர்தல் புறக்கணிப்பு முடிவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என உத்தரவிடுவதற்கான அனைத்து தகுதியும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
மக்கள் தேர்ந்தெடுத்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்வது மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது போலாகும். உறுப்பினர்கள் தங்கள் கடமையை செயல்படுத்த தவறியதாக இது கருதப்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி,
ஜனாதிபதி தேர்தலில் கட்டாய புறக்கணிப்பு என்பதற்கே இடமில்லை. இந்த முயற்சிக்கு அனுமதியளித்தால் தேர்தல் வாக்களிக்கும் உரிமை கொண்ட பெரும்பாலனோரின் பங்களிப்பு மறுப்பு போலாகும். மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்களிப்பு கொள்கைக்கு முரண்பாடாக அமைந்துவிடும்.
தேர்தலை புறக்கணிக்கும் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்க கூடாது. இந்திய நாட்டின் உயர்ந்த பதவிக்கு நடத்தப்படும் தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கும் உரிமை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கிடையாது என்றார்.
காங்கிரஸ் கிண்டல்
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி,
அரசியல் சட்டத்திலேயே இல்லாத ஒன்றை தேர்தல் விதியாக அறிவிக்குமாறு ஆணையத்திடம் போய் கேட்டுக் கொண்டுள்ளது பாஜக. அருண் ஜேட்லி போன்ற மூத்த வழக்கறிஞர்களை கொண்ட ஒரு கட்சிக்கு அரசியல் சட்டமே தெரியாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்லது என்றார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் சொத்து கணக்கை காட்ட வேண்டும் என பாஜகவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இந் நிலையில் இக் கூட்டணியின் தற்போதைய கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரியவில்லை. இன்றுக்கு தனது முடிவை ஆணையம் அறிவித்துவிடும் என்று தெரிகிறது.













Click it and Unblock the Notifications