இந்துக்கள் மீது விமர்சனம்-கருணாநிதி மீதானவழக்கை வாபஸ் பெற்றதை எதிர்த்து வழக்கு
சென்னை:இந்துக்கள் குறித்து முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்தை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய அதிமுக அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடந்த கிறிஸ்தவ சமுதாய நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, கிருஷ்ணர் என்றால் திருடன் என்று பொருள் என இந்து நூலிலேயே கூறப்பட்டுள்ளது. நான் அதை ஏற்க மாட்டேன். இதயத்தை திருடுபவன் என்று வேண்டுமானால் சொல்வேன் என்றார்.
இதையடுத்து கருணாநிதி மீது சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த மே மாதம் இந்த வழக்கை வாபஸ் பெற உத்தரவிட்டது திமுக அரசு.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், கடந்த மே மாதம் திமுக அரசு 64 வழக்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியது.
அதில் இந்துக்கள் என்றால் திருடன் என்று பேசியது தொடர்பாக கருணாநிதி மீது எழும்பூர் நீதிமன்றத்தில் பிரேம்நாத் என்ற தனி நபர் தொடர்ந்த வழக்கும் ஒன்று.
முதல்வர் தன்னையே நீதிபதியாக கருதிக் கொண்டு, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கை முழுமையாக பரிசீலித்த பின்னரே எழும்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று நடத்தி வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி, தன் மீதான வழக்கை வாபஸ் பெற உத்தரவிட்டது, சட்டம், நீதிக்கு முரண்பாடாக உள்ளது.
எனவே முதல்வர் மீதான வழக்கை வாபஸ் பெறும் அரசின் உத்தரவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தொடர்ந்து கருணாநிதி மீதான வழக்கை நடத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.கே.மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா,
வழக்கு முடிவுற்று விட்டதாக எழும்பூர் நீதிமன்றம் அறிவித்து விட்டது. எனவே அதை எதிர்க்க வேண்டுமானால் அந்த நீதிமன்றத்தைத்தான் மனுதாரர் அணுக வேண்டும். அதை விடுத்து அரசு உத்தரவை எதிர்த்து வழக்குப் போட முடியாது என்றார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, எந்தக் காரணமும் இல்லாமல் 64 வழக்குகள் ஒரே நேரத்தில் வாபஸ் பெறப்படும்போது அதனால் பாதிக்கப்படும் எந்த நபரும் அரசு உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம் என்று கூறி மனுதாரரின் புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications