குமரியில் பரவும் காய்ச்சல்- சிக்குன்குனியாவா?
கன்னியாகுமரி:குமரி மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் பரவி வரும் மர்ம நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் சிக்குன் குனியா பரவியதில் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இதையடுத்து கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந் நிலையில் குமரி மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களில் மக்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். மலை கிராமங்களான கடையாலுமூடு, ஆறுகாணி, அணைமுகம், வண்ணாத்திப்பாறை உட்பட ஏகப்பட்ட கிராமங்களில் உள்ளவர்கள் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து குமரி மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குனர் ரால்ப் செல்வின் கூறுகையில்,
குமரியில் பெய்த மழையினால் தான் இந்தர் காய்ச்சல் பரவியுள்ளது. இவர்களுக்கு வந்துள்ளது சாதாரண வைரஸ் காய்ச்சல் மட்டுமே. இருப்பினும் மத்திய அரசு அனுப்பிய டெஸ்ட் கிட் மூலம் சோதனை செய்து வருகிறோம்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இதுவரை யாருக்கும் சிக்குன்குனியாவின் அறிகுறி இல்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதார பணியாளர்கள் மூலம் அனைத்து இடங்களிலும் கொசு மருந்து அடித்தல், பொதுதொட்டிகளில் பினாயில் ஊற்றுதல் மற்றும் கழிவுநீர் தேங்காமல் தடுத்தல் ஆகிய பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
