பெரியாறு: தமிழகத்துடன் பேச தயார்-கேரளா
திருவனந்தபுரம்:முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து தமிழகத்துடன் பேச தயாராக இருப்பதாக கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அவர் பதிலளிக்கையில், மத்திய அரசின் பரிந்துரைப்படி அணை பாதுகாப்பு குழு நியமிக்கப்பட்டு, அணையின் நிலைமை குறித்து 3 முறை தமிழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தமிழகத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதுகுறித்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மனுதாக்கல் மீதான விசாரணை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த அணை கண்காணிப்பு குழு தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களிடையேயான தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதுடன், 22 அணைகளின் பாதுகாப்பு குறித்தும் காண்காணிக்கும்.
கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது. இக்குழு முல்லை பெரியாறு அணையுடன் சேர்த்து 12 அணைகளை ஆய்வு செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் தற்போதுள்ள 136 அடி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என தமிழகம் விரும்புகிறது.
இந்த அணை இரு மாநிலங்களை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 100 வருடம் பழமையான அணை என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி நீர்மட்டத்தை 136 அடி நிலையிலேயே இருக்க வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது என்றார்.
முல்லை பெரியாறு பிரச்சனையை இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்து கொள்ளவேண்டும் உச்சநீதிமன்றம் ஆலோசனை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
